குரு÷க்ஷத்திர யுத்தம் நடந்து கொண்டிருந்தது. துரோணர் மிக வீரமாக போரிட்டார். அவரைக் கொல்ல கிருஷ்ணர் ஒரு உபாயம் செய்தார். புத்திரபாசம் மிக்க துரோணரை நிலைகுலையச் செய்ய, அவரது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக பொய் சொல் என தர்மரைத் தூண்டினார். தர்மர் மறுக்கவே, சரி! அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்டதாக துரோணரின் காதில் பட்டும் படாமலும் விழுவது போல் சொல், என்றார். தர்மரும் அவ்வாறே செய்ய மகன் தான் இறந்தான் என நினைத்து துரோணர் போர்க்களத்தில் சாய்ந்தார். இதனால் கொடிய பாவம் தர்மரை பிடித்துக் கொண்டது. அவர் இறந்ததும், இந்த பாவத்திற்குரிய பலனை அனுபவிக்க நரகத்திற்கு இழுத்துச் சென்றனர். தர்மர் அங்கு வந்ததும் நரகவாசிகள் ஆனந்தம் அடைந்தனர். தர்மரே! தர்மவானான உமது பாதம் பட்டதுமே, நரகத்தில் நாங்கள் அனுபவித்த கொடுமைகள் தீர்ந்தது போல் உணர்கிறோம். நீர் இங்கேயே தங்கியிருக்க வேண்டும், என்றனர்.
தர்மருக்குரிய தண்டனை நேரம் முடிந்ததும், அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல கிங்கரர்கள் வந்தனர். தர்மரோ அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.நான் இங்கு வந்தததால், இந்த நரகவாசிகள் நிம்மதியாக இருப்பதாக உணர்கின்றனர். அவர்களுக்கு நான் செய்த புண்ணியபலனை தானம் செய்கிறேன். அவர்களை சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்லுங்கள், என்றார். கிங்கரர்களும் அவ்வாறே புஷ்பக விமானங்களை வரவழைத்து சொர்க்கத்துக்கு அவர்களை அனுப்பினர். கடைசியாக வந்த விமானத்தில், தர்மரையும் ஏறச்சொன்னார்கள். நான் தான் புண்ணியத்தை தானம் செய்து விட்டேனே! என்னால் எப்படி வர முடியும்? என்றார். புண்ணியத்தையே நீர் தானம் செய்தீரே! அந்த தானம் தானங்களில் மிக உயர்ந்தது. அதற்குரிய பலனாக சொர்க்கம் செல்லலாம், என்றனர். ஒரு நல்லவன் இருந்தால் போதும். உலகில் மழை கொட்டும்.