போதிசத்துவர் என்பவர் ஒரு பெரும் பணக்காரருக்கு மகனாக பூமியில் பிறந்தார். அந்த பணக்காரரிடம் பல கோடி பொற்காசுகள் இருந்தது. தந்தை காலமானதும், அத்தனை சொத்தும் போதிசத்துவரைச் சேர்ந்தது. அவர் அதை தர்மத்திற்காக பயன்படுத்தினார். நல்ல வழியில் அவர் பணத்தை செலவிட்டதால், பெரும் புண்ணியத்தை ஈட்டினார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் பிறந்தான். சில காலம் கழித்து போதிசத்துவரும் காலமானார். அவர் செய்த புண்ணியத்தால், அவர் தெய்வ அந்தஸ்தை அடைந்தார். அவரது மகனோ, தந்தையின் பொருளை தீயவழியில் செலவழித்தான். மது, மாது என அலைந்தான். அவனைச் சுற்றிய நண்பர் கூட்டம், அவனது வள்ளல்தன்மையைப் புகழ்வது போல நடித்தது. இதைக்கண்டு குதூகலித்த அவன், மேலும் மேலும் பொருளைச் செலவழித்தான்.
ஒரு கட்டத்தில் செல்வமெல்லாம் தீர்ந்து விடவே, வறுமை நிலையை அடைந்தான். அவனைச் சுற்றியிருந்த நண்பர் கூட்டம் பறந்து விட்டது. பசியால் தவித்த தன் மகனை தேவலோகத்தில் இருந்த போதிசத்துவர் கண்டார். அவன் மேல் இரக்கம் கொண்டு பூமிக்கு வந்தார். மகனிடம் ஒரு அட்சய பாத்திரத்தை கொடுத்து, மகனே! உனக்கு தேவையான பொருள் இந்த பாத்திரத்தில் நிறையும், என்றார். அவனோ, மதுவையும் உணவையும் நினைத்தான். மது நிரம்பியபடியே இருந்ததால் குடித்து மகிழ்ந்தான். உணவைச் சாப்பிட்டு மகிழ்ந்தான். ஒருநாள், குடிவெறியில் தள்ளாடியபடியே நடந்தான். ஓரிடத்தில் பாத்திரம் கீழே விழுந்து நொறுங்கி விட்டது. மீண்டும் வறுமைக்குள்ளாகி, பசி தாங்காமல் உயிரையே விட்டான். மனிதன் தவறு செய்வது இயற்கை. அவன் திருந்துவதற்கு தெய்வம் சந்தர்ப்பம் தருகிறது. அதைத் தவற விடுபவன், தன்னையே இழக்கிறான்.