ஒரு செயலைச் செய்யும் போது நல்லதும், கெட்டதும் இணைந்தே வரும். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். அதில் இருந்து அமுதக்குடம் வந்தது. கூடவே விஷமும் வந்தது. அதுபோல அதில் இருந்து திருமகளும் தோன்றினாள். அவளுக்கு முன்னதாக இன்னொரு பெண்ணும் வெளிப்பட்டாள். அவளது அங்க லட்சணங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. அந்த மூத்ததேவியை கண்டாலே எல்லாரும் ஓடினர். மூத்ததேவியான அவளது பெயரையும் மூதேவி என சுருக்கிவிட்டனர். ஆனாலும், அக்காவும், தங்கை திருமகளும் ஒற்றுமையாகவே இருந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள். ஒரு ஊரில் வசித்த இளைஞன், வயல் வேலைக்குச் சென்றால் ஒழுங்காகப் பார்க்க மாட்டான். வரப்பு மீது படுத்து உறங்கி விடுவான். வயல் உரிமையாளர் திட்டித் தீர்ப்பார். ஒருநாள் இரண்டு தேவிகளும் அந்த வயல் பக்கமாகச் சென்றனர்.
அப்போது உரிமையாளர் அவனை நோக்கி, ஏண்டா! உன்னிடம் எப்போதும் மூதேவி குடியிருக்கிறாளே! உறங்கிக் கொண்டே இருக்கிறாயே! என திட்டினார். இதைக் கேட்ட மூத்ததேவி தன் தங்கையிடம், சகோதரி! பார்த்தாயா! உலகில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்ள என் பெயரை வீணாக இழுக்கிறார்கள். எனவே, நான் இவனுக்கு செல்வத்தை வழங்கப் போகிறேன், என்றாள். திருமகளும் அதற்கு சம்மதிக்க, அவனை அழைத்த மூத்ததேவி இந்த பொற்காசுகளை வைத்துக்கொள், என ஒரு மூடையைக் கொடுத்தாள். அதை அவன் தன் மனைவியிடம் ஒப்படைத்தான். அவள் அதில் உள்ளதை அளக்க பக்கத்து வீட்டில் நாழி வாங்கி வந்தாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு சந்தேகம். இவள் எதை அளக்கிறாள் என பார்ப்போமென சற்று புளியை நாழியின் அடியில் ஒட்டி விட்டாள். இளைஞனின் மனைவி அதை அளந்தபிறகு நாழியை ஒப்படைத்தாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு ஆச்சரியம். புளியில் ஒரு தங்கக்காசு ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் மீது ஆசை கொண்ட அவள், பக்கத்து வீட்டுக்காரி வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்து மூடையையே திருடிவிட்டாள்.
இளைஞன் மிகவும் வருத்தமடைந்தான். மறுநாள் வயலுக்குப் போய் கவலையுடன் இருந்தான். மூத்ததேவி அவனிடம் விபரம் கேட்டபோது, நடந்ததைச் சொன்னான். அவள் விலையுயர்ந்த நவரத்தின மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். அவன் குளிக்கும் போது ஆற்றில் விழுந்து விட்டது. அடுத்து முத்துமாலை ஒன்றைக் கொடுத்தாள். ஆற்றில் விழுந்து விடுமே என பயந்து கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்தான். வந்து பார்த்தால் அதைக் காணவில்லை. மூத்ததேவி இதுபற்றி திருமகளிடம் சொன்னாள். திருமகள் அவனை அழைத்து ஒரே ஒரு தங்கக்காசு மட்டும் கொடுத்தாள். அவன் அதை விற்று வீட்டுக்கு தேவையான அரிசி, மளிகை, மீன் ஆகியவை வாங்கிச் சென்றான். அவன் மனைவி அவனிடம் விறகு வெட்டி வரச் சொன்னாள். அவன் தன் வீட்டின் பின்னால் இருந்த மரத்தில் விறகு வெட்ட ஏறிய போது, ஒரு புதரில் காணாமல் போன முத்துமாலை இருந்ததைப் பார்த்தான். ஏதோ ஒரு பறவை எடுத்து வந்து அங்கே போட்டிருந்தது தெரியவந்தது. அவன் மனைவி மீனை நறுக்கியபோது, ஆற்றுக்குள் விழுந்த நவரத்தின மோதிரம் அதன் வயிற்றில் இருந்து வந்து விழுந்தது. மரத்தின் மீதிருந்த இளைஞனும், கீழிருந்த அவன் மனைவியும் கண்டுபிடித்து விட்டேன் என ஒரே சமயத்தில் கத்தவே, இதைக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரி, தான் திருடியது தெரிந்து விட்டது போலும் என நினைத்து, அரச தண்டனைக்கு பயந்து பொற்காசுகளை அவர்கள் வீட்டு வாசலில்வைத்து விட்டு ஓடிவிட்டாள். ஆக, காணாமல் போன எல்லாம் திருமகள் அருளால் கிடைத்தது. நவராத்திரி காலத்தில் திருமகளை வணங்கி எல்லா நன்மையும் பெறுங்கள்.