ஒரு கிராமத்திற்கு பக்கத்து நகரத்தில் இருந்து ஒரு இளைஞன் வந்து சேர்ந்தான். டிப்டாப்பாக உடையணிந்துஇருப்பான். தன்னை ஒரு அதிமேதாவி போல் காட்டிக் கொள்வதற்காக எந்த நேரமும் கைகளில் சில ஆங்கிலப் புத்தகங்களை வைத்திருப்பான். பலரது பார்வையிலும் படும்படி பொது இடங்களில் அமர்ந்து அவற்றை விரித்து வைத்துக் கொண்டிருப்பான். ஆனால், நிஜத்தில் அவன் போலி ஆசாமி! ஏ,பி,சி,டி கூட தெரியாத பிறவி! ஒருமுறை, ஒருவர் அவசர அவசரமாக ஒரு தந்தியுடன் ஓடிவந்தார். தம்பி! இதை படிச்சு சொல்லுங்க, என்றார். ஆசாமி சிக்கிக் கொண்டான். அது வந்து! இந்த தந்தி எந்த ஊரிலே இருந்து வந்திருக்கு? என கொண்டு வந்தவரிடம் கேட்டான். கோல்கட்டாவில் இருந்து வந்திருக்கு, என்றார் கொண்டு வந்தவர்.
சாரி! நான் படிச்சது லட்சுமணபுரியிலே! அங்குள்ள எழுத்துக்களைத் தான் எனக்கு வாசிக்கத் தெரியும், என்றான். தந்தியைக் கொண்டு வந்தவரும் அதை உண்மையென நம்பி வேறு ஆளைத் தேடி ஓடினார். ஆளுக்கு ஆள் போன் வைத்துள்ள காலத்தில் இப்படி ஒரு கதையா என கேட்காதீர்கள்! இதைச் சொன்னவர் சாதாரணமானவரல்ல! மகான் சிவானந்தர்! என்னதான் கல்வியறிவு வளர்ந்திருந்தாலும், இதுமாதிரி பந்தா ஆசாமிகளிடம் ஏமாறுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் சில போலிகள் தோன்றி மக்களை ஏமாற்றுகின்றன. படித்தவர்கள் கூட இவர்களிடம் ஏமாந்து போவது தான் வேடிக்கையும் வேதனையும்! ஆன்மிக, ஜோதிட உலகில் கூட பல பந்தாக்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களிடம் அலார்ட் ஆக இருக்கத்தான் இந்தக் கதை!