ஒரு எஜமானன் தன் பல்லக்கைத் தூக்க சில பணியாட்களை நியமித்தான். அவர்களும் அவர் சொல்லும் இடத்துக்கு தூக்கிச் செல்வார்கள். ஒருநாள், எஜமானன் பல்லக்கு தூக்கிகளிடம், இன்று பால் கறப்பவன் வரவில்லை. உங்களில் யாராவது கறந்து வாருங்கள், என்றான். அவர்களோ, எங்களுக்கு பல்லக்கு தூக்குவது மட்டுமே வேலை, இதையெல்லாம் செய்யமாட்டோம், என்றனர். அடுத்தநாள், எஜமானன் வீட்டு ஆட்டுக்குட்டி காணாமல் போனது. அதைத் தேடிக் கண்டுபிடித்து வர உத்தரவு போட்டான். இந்த வேலையெல்லாம் எங்களுக்கு தெரியாது. பல்லக்கு தூக்கச் சொன்னால் மட்டும் செய்கிறோம், என்று கறாராகச் சொல்லி விட்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க நினைத்தான் எஜமானன்.
ஜோராக உடையணிந்து பல்லக்கில் ஏறி, காட்டு பக்கமாக போங்கள், என்றான். எதற்கு? என்றனர் பல்லக்கு தூக்கிகள். பல்லக்கு தூக்குவது உங்கள் வேலை. அதில் அமர்ந்த படியே, காட்டுக்குப் போன ஆட்டுக் குட்டியைத் தேடுவது என் வேலை, என்றான். பல்லக்கு தூக்கிகளும் வேறு வழியின்றி சுமந்தனர். எஜமான் சொன்னதுமே சென்றிருந்தால் பல்லக்கின் எடையாவது குறைந்திருக்கும். இப்போது கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் பல்லக்கையும் எஜமானனையும் சேர்த்து சுமக்க வேண்டியதாயிற்று. முதலாளி சொன்ன வேலையைச் செய்வதே தொழிலாளியின் கடமை. இல்லாவிட்டால், அவனுக்கு சலுகைகள் கேட்க உரிமை கிடையாது.