மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது நல்ல கடமையாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற முடிவு, கடவுளின் கையில் தான் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, சிலருடன் ஆன்மிகம் குறித்த விவாதம் ஏற்பட்டது. கடவுள் நினைப்பதே நடக்கும், நம்மால் எதுவும் செய்ய முடியாது, என்று வாதிட்டார் சுவாமிஜி. இதை இரண்டு பயணிகள் மறுத்தனர். சுவாமிஜி, தன் கருத்தில் உறுதியாக நிற்கவே, ஆஜானுபாகுவான உடல் வாகு கொண்ட அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. உம்மை தூக்கி கடலில் எறிகிறோம், உமது கருத்து சரியானால், கடவுள் உம்மைக் காப்பாற்றட்டும், என்றபடியே, அவரருகே சென்று தூக்க முயன்றனர். ஆனால், மனபலம் மிக்க சுவாமிஜி, அவர்களை உதறி தள்ளினார்.
இருவரையும் சேர்த்துக் கட்டி தூக்கினார். கடலுக்குள் வீச முயற்சிக்கையில், மன்னியுங்கள்! மன்னியுங்கள்! நீர் சொன்னது சரி தான்! விட்டு விடுங்கள்! என்று கதறினர். அவர்களை சுவாமி விட்டு விட்டார். இப்போது சொல்லுங்கள், என்னை கடலில் எறிய முயன்றது நீங்கள். ஆனால், உங்களை நோக்கியே அந்த அஸ்திரத்தைத் திருப்பினார் கடவுள். அது மட்டுமல்ல! உங்களை நான் கடலில் எறிய முயன்றேன். அதை உங்கள் கெஞ்சல் மூலம் தடுத்து நிறுத்தியதும் அவரது சித்தமே! என்றார். அவர்கள் வாய் திறக்காமல் சென்று விட்டனர்.