மகத நாட்டின் தலைநகரான ராஜக்ருஹத்தின் வெளிப்புற சத்திரத்தில் தங்கியிருந்தார் புத்தர். மக்கள் தினமும் அவருடைய பேச்சைக் கேட்கத் திரளாக வந்தனர். அன்றும் அப்படியே ஜனங்கள் குழுமியிருந்தனர். புத்தர் தன் பரிவாரத்தைச் சேர்ந்த பிட்சு கஸ்யபனையே உறுத்துப் பார்த்தவாறு பேச்சைத் தொடங்கினார். துக்கத்துக்குக் காரணம் ஆசை, அதனால் துக்கத்திலிருந்து மீளும் மார்க்கம் ஒன்றே. ஆசையை விட்டொழிக்க வேண்டும். அவசியமற்ற பொருட்களின்மீது விருப்பம். அவற்றின்மேல் வளர்த்துக் கொள்ளும் பற்று, அவற்றைப் பெறவும் பெற்றதைப் பேணவும் இடையறாத பிரயத்தனம்-இவையே துக்கத்தின் காரணங்கள். சாதனை வழியில் செல்பவர்கள், முக்கியமாகத் துறவிகள் துக்கத்துக்குக் காரணமான கிரியைகளிலிருந்து விலகியே இருக்கவேண்டும் என்றார்.
கஸ்யபனின் முகம் வாடிவிட்டது. அன்று காலை அவன் ராஜக்ருஹத்துக்குப் பிச்சைக்காகப் போயிருந்தான். அங்கு ஒரு திருவிழா நடந்துகொண்டிருந்தது, அவ்விழாவில் ஒரு பந்தயம். ஒரு தங்கப் பேழையில் முத்து, ரத்தினங்களை நிரப்பி உயரத்தில் தொங்க விட்டிருந்தனர் மேலே ஏறாமல், சங்கிலியைத் துண்டிக்காமல் , பேழையையும் விழச் செய்யாமல் யார் அதைக் கீழே இறக்குகிறானோ அவனுக்கே அது சொந்தம் என்பது தான் பந்தயம். பலரும் இது வெறும் பாசாங்கு என்றனர். இன்னும் சிலர், முயன்று தோற்றவர்கள்! இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான் கஸ்யபன். அவனுக்கு அபூர்வமான யக்ஷிணி வித்தை தெரிந்திருந்தது. அதன் உதவியால் பேழை தானாகவே கீழிறங்கும்படி செய்து, வெற்றியடைந்தான். தான் வென்ற பேழையை, புத்தருக்கு அர்ப்பணிக்க எண்ணினான். ஒருவேளை அது புத்தருக்குத் தெரிந்து, அவனுக்காகவே இந்த அறிவுரையைச் சொன்னாரா என்று அவன் மனம் பேதலித்தது. பிரவசனம் முடிந்து அனைவரும் போனபின், தான் கொண்டுவந்த பேழையை புத்தரின்முன் வைத்து, தலைவணங்கி நின்றான்.
புத்தர் புன்சிரிப்புடன், கஸ்யபா! உனக்கு இந்தப் பேழை மற்றும் உள்ளே இருக்கும் செல்வத்தின் அவசியம் இருந்ததா? எனக் கேட்டார். இல்லை என்று தலையாட்டினான். அடுத்த கேள்வி வந்தது. பிட்சுக்களும் சாதகர்களும் ஆடம்பரப் பொருட்களை வைத்துக் கொள்ளலாமா? இதற்கும் பதில் இல்லை என்பதாக வந்தது. புத்தர் மறுபடியும் கேட்டார்: ஏன்? ஏனெனில் அவை துக்கத்துக்கு மூல காரணங்கள் என்றான் கஸ்யபன். புத்தர், இந்த துக்கத்தின் காரணங்களைப் பெறுவதற்காக நீ சிரமப்பட்டு சம்பாதித்த ஸித்திகளைச் செலவழித்துவிட்டாய். அதனால் பேழை உனதாயிற்று. கூடியிருந்த மக்கள் உன் வித்தையைக் கண்டு பிரமித்தனர். அவர்கள் பார்வையில், நீ ஒரு தெய்வீக சக்தியுடைய அற்புத மனிதன். உன்னை அறியாமலேயே உன் மனதில் அகங்காரம் துளிர்த்தது. இதுவும் போதவில்லை உனக்கு! இதை எனக்கு அர்ப்பித்து என்னை மகிழ்விக்க முயற்சித்தாய்! பிட்சு தர்மத்திலிருந்து வழுவினாய். இதற்கு என்ன சொல்கிறார்? என்று கேட்டார். கஸ்யபன் தன் தவற்றை உணர்ந்தான். புத்தர் அருளால், அவனது மன இருள் மாயை அகன்றது.