நல்லதும் கெட்டதுமாக மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. இந்த இரண்டையுமே ரசிக்கக் கற்றுக் கொண்டால், அது தேனாக இனிக்கும். ஒருத்தன் அமாவாசை இருட்டிலே காட்டுக்குள் போய்விட்டான். புலி ஒன்று துரத்த, ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டான். தண்ணீருக்குள் நீச்சலடித்து எதையாவது பிடிப்போமே என பார்த்தால், உள்ளே உஸ்..உஸ் என்று சத்தம். ஒரு பாம்பு தண்ணீரில் மிதந்து வருவது தெரிந்தது. படபடவென நீச்சலடித்து, கிணற்றில் ஊடுருவியிருந்த ஏதோ ஒரு கிளையைப் பிடித்து, காலை உயரத் தூக்கிக் கொண்டு தொங்கினான்.
வெளியே போயாக வேண்டும். கிணற்றில் மேல்மட்ட சுவரை எட்ட வேண்டுமானால், பிடித்திருக்கும் கிளை மீது எப்படியாவது தாவிக்குதித்து ஏறி மேலே சென்றால் தான் உண்டு. அந்த முயற்சியில், அவனது தலை கிணற்றுச் சுவர் மீது உரசியது. அவ்வளவு தான்! சுவரில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் அவன் உடலைப் பதம் பார்த்தன. பிடியை நழுவ விட்டால் பாம்பிடம் சிக்க வேண்டியிருக்கும். வலியைத் தாங்கிக் கொண்டான். இவன் உடல் தேன் கூட்டில் உரசியதில் தேன்கூட்டில், சின்ன துவாரம் விழுந்து ஒரு சொட்டு தேன் தற்செயலாக இவன் நாக்கில் விழுந்தது. அவ்வளவு கஷ்டத்திலும் அதன் இனிமையை ரசித்தான். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டால் தான், வாழ்க்கையில் இனிமையையே பார்க்க முடிகிறது. எனவே துன்பத்தையும் ரசியுங்க, இன்பத்தையும் ரசியுங்க. சீக்கிரம் முன்னேறலாம்.