ஒரு ஊரில் உத்தமமான மனிதர் வாழ்ந்தார். அவரும் அவரது மனைவியும் கருத்தொருமித்து 30 ஆண்டுகள் வரை குடும்பம் நடத்தியவர்கள். அவர் அந்தக்காலத்து மனிதர். பதினெட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. இப்போதும் கூட அவர் 48 வயது நடுத்தர இளைஞர் தான்! யார் கஷ்டப்பட்டாலும் தானாக முன் வந்து உதவிசெய்பவர். அவரது மனைவியும் அவரைப் போலவே. தன் வீட்டுக்கு வேலைக் வரும் ஏழைப்பெண்களுக்கு புடவை, ரவிக்கை, கர்ப்பிணியாக இருந்தால் பிரசவ செலவு என கொடுத்து உதவுவார். இதனால், அவர்களை ஊரே புகழ்ந்தது. இது ஊரில் இருந்த இன்னொரு பணக்காரருக்கு பிடிக்கவில்லை. இந்த வள்ளல் நம்ம பேரையே கெடுத்துகிட்டிருக்கான். இவனுக்கு என்றைக்கு கேடு காலம் வருதோ, அன்று தான் ஊர்க்காரர்கள் நம்மை மதிப்பார்கள். என்னிடம் வேலை செய்தவர்களெல்லாம், அவன் கொடுக்கும் இலவசத்திற்கு மயங்கி அங்கே போய்விட்டார்கள்.
கடவுளே! அவன் வீட்டில் ஏதாச்சும் அசம்பாவிதம் நடக்கட்டுமே! என்று வேண்டிக் கொண்டே இருந்தார். கடவுள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். எந்த ஜென்மத்திலோ செய்த பாவம், வள்ளலை ஆட்டிப் படைக்க வந்தது. வள்ளலின் மனைவி இறந்து போனார். எதிர் பணக்காரருக்கு ஏக சந்தோஷம்! அப்பாடி! அவ தொலைஞ்சா! இனிமேல், அங்கு உள்ள பெண்களெல்லாம் என் வீட்டுக்கு வேலைக்கு வந்துடுவாளுங்க! நான் கொடுக்கிறதை வாங்கிட்டு கஞ்சியைக் குடிச்சுட்டு கிடப்பாளுங்க! என்று கணக்கு போட்டார். அவர் நினைத்தபடியே சில நாட்களில் நடக்கவும் செய்தது. மனைவியை இழந்த கணவரால், தன் தொழிலில் அக்கறை செலுத்த முடியவில்லை. அவர் இடிந்து போய் எதுவும் செய்யாமல் இருந்து விட்டார். நன்றியுள்ள ஒரு சில வேலைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் எதிராளியிடம் கிடைத்த கூலிக்கு வேலைக்கு போய் விட்டார்கள். ஒருவரால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. செய்பவர்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால் அந்த ஊருக்கு தான் நஷ்டம். எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வோமா!