ஒரு முறை மார்க்கண்டேயரிடம் ஜைமினி முனிவர், மகரிஷியே! எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மார்க்கண்டேயர், முனிவரே நீங்கள் விந்திய மலையில் வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன், சுபத்ரன், சுமுகன் என்ற நான்கு ஞானபட்சிகளைக் கேட்டால் அவை உங்கள் ஐயங்களைத் தீர்க்கும் என்றார். வியப்படைந்த ஜைமினி, முனிவரே! பறவைகள் ஞானம் போதிக்குமா? என வினவினார்.
மார்க்கண்டேயர் கூறினார்:
முனிவரே! ஒரு முறை துர்வாசர் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். அதனால் பயந்த இந்திரன், அவரது தவத்தைக் கலைக்க வபு என்ற அப்சரஸை அவரிடம் அனுப்பினான். அவள் துர்வாசரின் தவத்தைக் கலைத்துவிட்டாள். துர்வாசர் அவளைக் கழுகாய் பிறக்கும் படிச் சாபமிட்டார். அவள் துர்வாசரைப் பணிந்து தன் தவற்றை மன்னித்து சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினாள். துர்வாசர் அவளிடம் நான்கு குஞ்சுகள் உனக்குப் பிறக்கும். அர்ஜுனனின் அம்பால் நீ மரணமுற்று உன் நிஜ ரூபத்தை அடைவாய் என்றார். வபு கழுகாகப் பிறந்தாள், மந்தபாலன் என்பவனின் மகனான துரோணன் என்பவனை மணந்தாள். பதினாறு ஆண்டுகள் கழித்து அவள் கர்ப்பமுற்றாள். அச்சமயம் பாரத யுத்தம் குரு÷க்ஷத்திரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அர்ஜுனன் விடுத்த ஓர் அம்பு வபுவின்மேல் பாய்ந்தது. உடனே வபுவின் கர்ப்பத்திலிருந்த நான்கு முட்டைகளும் பூமியில் விழுந்தன. தெய்வம்தான் தன் குஞ்சுகளைக் காக்க வேண்டும் என்று கூறிவிட்டு வபு உயிர் துறந்தாள். அந்த யுத்த பூமியில் ஒரு யானையின் கழுத்திலிருந்த ஒரு பெரிய மணி அறுந்து அந்த முட்டைகளின் மேல் கவிழ்ந்து விழ, அந்த மணியின் கீழ் முட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன.
யுத்தம் முடிந்து குரு÷க்ஷத்திர பூமியில் அமைதி ஏற்பட்ட பின் ஒரு நாள் காலை சமீகர் எனும் மகா முனிவர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார். மணியின் அடியிலிருந்து பறவைக் குஞ்சுகளின் கீச் கீச் எனும் ஒலியைக் கேட்டார். முனிவர் அந்த மணியின் அடியில் நான்கு குஞ்சுகளைக் கண்டார், கருணையுடன் அவற்றைத் தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அக்குஞ்சுகள் அவரிடம் மகானுபாவரே! தங்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். உங்களுக்கு நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டுமோ கூறியருளுங்கள் என்றன. வியப்புற்ற சமீகர், நீங்கள் யார்? எதனால் பக்ஷிஜென்மத்தை அடைந்தீர்கள்? என்று கேட்டார். முனிவரே! நாங்கள் நால்வரும் சுக்ருதி எனும் மகாமுனிவரின் புதல்வர்களாகப் பிறந்திருந்தோம். சாஸ்திரங்களைக் கற்றறிந்து, பெற்றோரை பூஜித்து வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் தேவேந்திரன் எங்கள் தந்தையின் சத்திய நெறியைச் சோதித்தறிய விரும்பி, கழுகு உருவில் வந்து தனக்கு நர மாமிசம் வேண்டு மென்று கேட்டார். எங்கள் தந்தை எங்களிடம் யாராவது ஒருவர் இந்திரனுக்கு ஆகாரமாகுங்கள் என்று கட்டளை இட்டார். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. கோபமடைந்த அவர் எங்களைப் பறவைகளாகப் பிறக்கும்படிச் சபித்துவிட்டார். பிறகு அவர் தன் உடலையே இந்திரனுக்கு அர்ப்பணித்துவிட்டார். இந்திரன் எங்கள் தந்தையின் தியாகத்தை மெச்சி, எங்களிடம், நீங்கள் விந்திய மலையில் சென்று வசியுங்கள். வியாசரின் சீடரான ஜைமினி உங்களிடம் வந்து சில தர்ம சந்தேகங்களைக் கேட்பார். அவற்றைத் தீர்த்தவுடன் உங்கள் சாபம் விலகும். நீங்கள் பக்ஷிகளாக இருந்தாலும் சகல வேத, தர்ம சாத்திரங்களையும் அறிந்த ஞானபட்சிகள் என்று போற்றப்படுவீர்கள் என்று அருளினார்.
பறவைகள் இவ்விதம் தம் பூர்வஜென்மக் கதையை கூறக் கேட்ட சமீகர் மிகவும் மகிழ்ந்தார். அதனால், ஜைமினி முனிவரே! நீங்கள் அந்தப் பறவைகளிடம் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் கேட்பவரின் ஐயத்தைக் தீர்ப்பது மகாத்மாக்களின் லட்சணம் என்று கூறி மார்க்கண்டேயர் தவமியற்றச் சென்றார். ஜைமினி மனிவர், விந்திய பர்வதத்தில் ஞானப்பறவைகளைத் தேடிச் சென்ற போது அவை இனிமையாக வேத அத்யயனம் செய்துகொண்டிருந்தன. முனிவர் அவற்றிடம் ஞானப் பறவைகளே! நான் வியாசரின் சீடன். மார்க்கண்டேயர் கூறியபடி உங்களிடம் வந்துள்ளேன் என்று கேட்க, அப்பறவைகளும் சம்மதித்தன.
ஜைமினி தமது சந்தேகங்களைக் கேட்டார்:
1. ஸ்ரீமத் நாராயணன் துவாபர யுகத்தில் லீலா மானுட விக்கிரகமாக அவதரித்ததன் காரணம் என்ன?
2. திரவுபதிக்கு ஐந்து கணவர்கள் எதனால் அமைந்தனர்?
3. கவுரவ, பாண்டவர் போரின்போது பலராமர் ஏன் தீர்த்த யாத்திரை சென்றார்?
4. திரவுபதிக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களும் திருமணம் கூட ஆகாமல் அகால மரணமடையக் காரணம் என்ன?
இவற்றைக் கேட்ட ஞானப்பட்சிகள் இவ்வாறு பதிலளித்தன:
1. முனிவரே, தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கும்போது பூமி பாரத்தைக் குறைக்க ஸ்ரீமந் நாராயணன் அவதாரமெடுப்பார்.
2. திரிசுரன் (விஸ்வரூபன்) என்பவனைக் கொன்றதால் பிரம்ம ஹத்தி தோஷம் இந்திரனைப் பற்றியது. அதை எமனுக்கும், வாயுவுக்கும், அஸ்வினி தேவதைகளுக்குமாக நான்காகப் பிரித்துக் கொடுத்து, தன் அம்சங்களையும் அவர்களுடன் இருத்தி வைத்தான்.
அதனால் எமனின் அம்சமான தர்மபுத்திரரும், வாயு மூலமாக பீமனும், அஸ்வினி தேவதைகள் மூலம் நகுல சகதேவனும் பிறந்தனர். இந்திரன் தன் அம்சத்தோடு அர்ஜுனனாகப் பிறந்தான். இந்த விஷயத்தை அறிந்த இந்திரனின் மனைவி சசிதேவி, துருபதன் வளர்த்த வேள்வியில் இருந்து திரவுபதியாக உதித்து, இந்திர அம்சத்தோடு பிறந்த பஞ்ச பாண்டவர்களை மணந்தாள்.
3. பலராமரின் தங்கை சுபத்திரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்திருந்தார்கள். துரியோதனன் அவரிடம் கதையுத்தம் பயின்ற பிரிய சீடன். தன் தம்பி ஸ்ரீகிருஷ்ணனோ பாண்டவர்கள் பக்கம் நிற்கிறான். யுத்தத்தில் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் தனக்குப் பிரியமானவர்களோடு போர் செய்ய வேண்டி வரும். இதனால் யாத்திரைக்குப் போகும் சாக்கில் பலராமன் யுத்தத்திலிருந்து விலகி நின்றார்.
4. விஸ்வதேவர்களே உப பாண்டவர்கள். விஸ்வாமித்திரரின் சாபத்தால் திரவுபதியின் வயிற்றில் பிறந்து, திருமணம் போன்ற பந்தங்களில் சிக்காமல் அச்வத்தாமனால் அகால மரணமுற்றனர். பிறகு ஜைமினி, பாவ புண்ணியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு இருக்கும்? என்று கேட்டார். ஞானப்பட்சிகள், முனிவரே! பாவங்கள் தெரிந்து செய்தவை, தெரியாமல் செய்தவை என இரண்டு வகைப்படும். சிறு பாவங்களானால் அவற்றின் பலன் உடனே வியாதி உருவில் அனுபவிக்கப்பட்டுவிடும். பெரிய பாவங்களானால் ஜென்ம ஜென்மமாகத் துரத்தி வரும். தெரிந்து செய்த பாவங்களுக்குத் தண்டனை பெரிதாக இருக்கும். இது போல் பல சந்தேகங்களை ஜைமினி கேட்க, ஞானப்பறவைகள் தகுந்த விளக்கங்கள் அளித்து அதன் மூலம் அவை சாப விமுக்தி பெற்றன. இவ்வாறு மார்க்கண்டேய புராணம் முழுவதும் ஞானப்பட்சிகள் கூறும் கதைகளும் விளக்கங்களுமாக நிறைந்து சுவையாக உள்ளது.