சனீஸ்வரருக்கு கருப்பு நிற வஸ்திரம், நவரத்தினங்களில் நீலம் ஆகியவை ஏற்றது என்கிறார்கள். தேவர்களில் ஒருவரான அவர், கால் ஊனமுற்றிருந்தாலும், தேஜஸாகத் தான் இருந்தார். அவர் கருப்பாக மாறியது ஒரு பெரிய கதை.
தன்னுடன் காட்டுக்கு வந்த மனைவி தமயந்தி கஷ்டப் படுவதைப் பார்த்து, நளன் கண்ணீர் வடித்தான். அவளை எப்படியாவது அவளது வீட்டுக்கு அனுப்ப பிரயாசைப் பட்டார். தமயந்தியோ, கணவனை விட்டு அகலமாட்டேன் என பதிபக்தியுடன் இருந்தாள். ஒருநாள் இரவில், அவளை ஒரு மண்டபத்தில் தனியே விட்டு விட்டு நளன் சென்று விட்டான். விழித்த தமயந்தி அழுதபடியே பக்கத்து நாட்டுக்குச் சென்றாள். அவள் அங்கிருப்பதை அறிந்த அவளது தந்தை தன் நாட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். நளனின் திட்டம் பலித்தது. ஆனால், நளன் அதன்பிறகும் கஷ்டப்பட்டான். ஒரு இடத்தில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டுஇருந்தது. அதற்குள் சிக்கிக் கொண்டிருந்த பாம்பு ஐயோ! காப்பாற்றுங்கள்! என்று கதறிக் கொண்டிருந்தது. இரக்கப்பட்ட நளன் பாம்பைப் பிடித்து வெளியே விட, அது அவனைக் கடித்து விட்டது. நளனின் நிறம் கருப்பாகி விட்டது. உன்னைக் காப்பாற்றிய என்னைக் கடித்து விட்டாயே! என நளன் வருந்தினான். எல்லாம் நன்மைக்கே, என்ற பாம்பு நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை எடுத்துச்சொல்லி மறைந்து விட்டது. விஷம் நளனின் உடலுக்குள் புகும்போது, அவனைப் பற்றியிருந்த சனீஸ்வரனும் அவஸ்தை பட்டார். ஒரு நல்லவனைப் பிடித்ததால் சனிக்கே சோதனை வந்து விட்டது. அவரும் கருப்பாகி விட்டார். இதனால் தான், சனிக்கு கருப்பு வஸ்திரம், கருப்பு எள், நீலக்கல் ஆகியவை ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.