ஒரு இளைஞன், காலை 9 மணிக்கு தான் எழுந்திருப்பான். அம்மா அவனை இடையில் எழுப்பினால், ஏன் பாடாய் படுத்துகிறாய்? ஒழிந்துபோல எப்போது எழவேண்டுமென எனக்குத் தெரியும், என்று எரிந்து விழுவான். அவனைப் பற்றிய கவலையிலேயே அம்மாவின் ஆயுள் சீக்கிரம் முடிந்து போனது. அம்மா இறந்த அன்று மாலையே உறவினர்கள் போய்விட்டார்கள். அதற்கு மறுநாள் கூட, காலை 9 மணிக்கு தான் அவன் எழுந்தான். அம்மா இருக்கும் ஞாபகத்தில், படுக்கையில் இருந்தபடியே காபி என்றான். யார் தருவார்கள் அவனுக்கு? அப்போது தான் அவனுக்கு உறைத்தது... வீட்டில் யாருமில்லையே என! அவனுக்கு அப்பா, அக்கா, தங்கை என எந்த உறவுமில்லை. அனாதையான அவன் எழுந்து கடைக்குப் போனான். அங்கு ஏனோதானோவென உணவு கிடைத்தது.
அம்மா ருசியாக சமைத்துப் போட்ட நேரங்களில் எல்லாம், அவளிடம், இதில் உப்பு இல்லே, காரம் இல்லே... என்ன வச்சு தொலைச்சிருக்கே, என்று திட்டியது ஞாபகத்துக்கு வந்தது. அவன் முதன் முதலாக அம்மாவை நினைத்து கண்ணீர் வடித்தான். தன் சோம்பலால் அம்மா கத்தி கத்தியே கவலையில் உயிர் விட்டதை எண்ணி வருத்தப்பட்டான். அன்றுமாலை, மனசாந்திக்காக கோயிலுக்குப் போனான். அங்கே உபன்யாசகர் ஒருவர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஒருமுறை, கடவுள் உலகத்திற்கு வந்தார். எல்லா உயிர்களும் தன்னைப் பார்க்க வரலாம், அவர்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார். அனைத்து உயிர்களும் அவரைப் பார்க்க கியூவில் நின்றன. எல்லாரும் சென்றதும், கடவுளும் புறப்பட்டார். அப்போது நத்தைகள் வந்தன.
ஏன் இவ்வளவு தாமதம்? என்றார் கடவுள். சோம்பலாக இருந்தது. வீட்டிலேயே இருந்து விட்டோம். சரி...என்னதான் நடக்கிறதென பார்க்க வந்தோம், என்றன. கடவுளுக்கு கோபம் வந்து விட்டது. சோம்பல் யாருக்கும் ஆகாத குணம். சோம்பலால் வீட்டிலேயே தங்கினீர்கள் அல்லவா! அந்த வீட்டை உங்கள் முதுகிலேயே சுமந்து செல்லுங்கள், என்று சபித்தார். நத்தைகளும் இன்றுவரை அவற்றை சுமந்து கொண்டிருக்கின்றன, என்று கதையை முடித்தார். ஆம்...சோம்பலால் நத்தைகள் தங்கள் பாரத்தை தாங்கள் சுமக்கின்றன. நமக்கும் அதுதானே தண்டனை என்று நினைத்த இளைஞன், இறைவா! என்னை மன்னித்து விடு. இனியேனும் என்னை சுறுசுறுப்புள்ள வனாக்கி, என் தெய்வத்தாயை மகிழச்செய், என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டான்.