சந்தேகக்கோடு அது சந்தோஷக் கேடு என்பார்கள். சிலருக்கு சந்தேகத்தைப் போக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். மாணவனுக்கு கணக்கிலே சந்தேகம் வருகிறதென்றால், அது நியாயம்! பக்கத்தில் இருக்கும் மாணவி தற்செயலாக இவன் இருக்கும் திசைநோக்கிப் பார்க்க, தன்னைத் தான் பார்க்கிறாளோ என்றால் அநியாயம் இல்லையா? ஒரு கதையைக் கேளுங்க. கோடைகாலம்.. வெயில் கொளுத்தியது. கந்தசாமி மண்பானையில் தண்ணீர் ஊற்றி, மணல் பரப்பி அதன் மேல் வைத்தார்.
வாசத்துக்காக வெட்டிவேரை போட்டார். தினமும், வெளியே போய்விட்டு வந்ததும் நாலு டம்ளர் தண்ணீரை உள்ளே தள்ளுவார். ஒருநாள் தாகம் ரொம்ப அதிகம்... பானையைத் திறந்து படபடவென தண்ணீரைக் குடிக்க, தண்ணீரில் கிடந்த வெட்டி வேரும் தொண்டைக்குள் போய்விட்டது. சற்று அண்ணாந்து பார்த்தால் சுவரில் ஒரு பல்லி ஒட்டிக்கொண்டிருந்தது. ஆகா! வெட்டிவேர் உள்ளே போனதா! இந்தப் பல்லியின் குட்டி பானைக்குள் விழுந்து அது உள்ளே போயிருக்குமோ.... எதற்கும் வைத்தியரிடம் கேட்போமென நாலைந்து வைத்தியர் வீட்டுக்கு போய், பல்லி உள்ளே போய்விட்டால் மருந்து என்ன? என கேட்டார்.
வைத்தியர் இவர் ஒரு சந்தேகப்பேர்வழி என்பதைப் புரிந்து கொண்டார். பேதிக்கு மருந்து கொடுத்தார். தோட்டத்துக்குப் போய் ஒரு உயிருள்ள பல்லியை கல்லுக்கு கீழே வைத்தார். இதற்குள் கந்தசாமிக்கு வயிற்றை புரட்டிவிட அந்தக் கல்லின் பக்கமாக போகச் சொன்னார். கந்தசாமி எழுந்ததும், பார்த்தீரா! பல்லி வெளியே வந்து விட்டதை! என்றார். அப்பாடி! சந்தேகம் நீங்கிவிட்டது. சந்தேக சாமிகளை திருத்துறது ரொம்ப கஷ்டம் தான்!