கடவுள் பல சந்தர்ப்பங்களை மனிதனுக்குத் தருகிறார். சிலர் அதைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, இந்தக் கடவுள் இருக்கிறானே! அவனுக்கு ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு. என்னை ஏழையாகவே வைத்திருக்கிறான். அவனை பணக்காரனாக்கி விட்டான், என்கிறார்கள். ஒரு ஊரில், ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். விவசாயத்தில் நஷ்டமாகவே, காட்டில் போய் விறகு வெட்டி பிழைத்தான். ஒருசமயம், அவன் அந்நாட்டு அரசனின் பார்வையில் பட்டான். காட்டில் மரம் வெட்டுவது குற்றமல்லவா! பின் ஏன் மீறினாய்? என்றான்.
அரசே! விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்கள் இழப்பீடு ஏதும் தரவில்லை. மானியம் கேட்டேன், மறுக்கப்பட்டது. என் குடும்பம் பசியால் தவிக்கிறது. இதைவிற்றுக் கிடைக்கும் சொற்பக்காசில் கால் வயிறு கஞ்சிகுடிக்கிறோம், என்று அழுதான். அதிகாரிகளைக் கடிந்து கொண்ட ராஜா, அவனுக்கு சந்தனமரக்காடு ஒன்றை பரிசாக அளித்தான். சிலகாலம் கழித்து ராஜா திரும்பவும் அவனை அழைத்தார். சந்தனக்காடு தந்தேனே! முன்னேறி விட்டாயா! என்றார். ஓ! முன்பு கால்வயிறு கஞ்சி குடித்த என் குடும்பம் இப்போது அரை வயிறு குடிக்கிறது, என்றான்.
அதிர்ச்சியடைந்த ராஜா, சந்தனமரம் இருந்தால் லட்சாதிபதியாகி இருக்கலாமே! நீ மரங்களை என்ன செய்தாய்? என்றான். ராஜா! மரக்கட்டைகளை விற்பதை விட, அதன் கரியை விற்றால் லாபம் அதிகம் கிடைக்கும். நீங்கள் தந்த மரக்காட்டை அழித்து கரியாக்கினேன். அதை விற்று பிழைத்து வருகிறேன், என்றான். பிறகென்ன! ராஜா தலையில் அடித்துக் கொண்டான். இப்படித்தான்! முன்னேறுவதற்கு எப்போதாவது தான் ஆண்டவன் சந்தர்ப்பத்தைத் தருவான். அதை விட்டுவிட்டால், காலம் முழுக்க அழுவதைத் தவிர வேறு வழியில்லை