ஒரு ஊரில், மரத்தில் ஒட்டியிருந்த ஒரு விசித்திர பிராணியை சிலர் பார்த்தனர். முதலாமவன், அந்த மரத்தைக் கடக்கும் போது, அது பச்சையாக இருந்தது. அடுத்தவன் கடக்கும் போது சிவப்பாக மாறிவிட்டது. மூன்றாமவன் கடக்கும் போது மஞ்சள் நிறமாக இருந்தது. அவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடினர். அந்த பிராணியைப் பற்றி பேச்சு வந்தது. ஒருவன் அதன் நிறம் பச்சை என்று சொல்ல, இன்னொருவன் சிவப்பு என்க, மற்றொருவன்...நீங்க இரண்டு பேரும் குருடர்கள், அது மஞ்சள்,என்றான். அவர்களுக்குள் சண்டை வலுத்துவிட்டது. அங்கே ஒரு துறவி வந்தார்.
சண்டைக்கான காரணத்தை அறிந்தார். அடே முட்டாள்களா! அந்த பிராணியின் பெயர் பச்சோந்தி. நிமிஷத்துக்கு நிமிஷம் நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை அதற்குஉண்டு. நீங்கள் மூவரும் பார்த்தது ஒரே பிராணியைத் தான், என்றார். இதே போல, கடவுளை உருவம் உள்ளவர், உருவம் இல்லாதவர், அருவுருவமாக இருப்பவர் என்று பலவாறாக பிரிக்கிறார்கள். ஆனால், எல்லாம் ஒரே இறைவனைத் தான் குறிக்கிறது. வழிகள் பலவானாலும், எல்லா மதங்களும் ஒரே இறைவனை நோக்கியே பயணிக்கின்றன.