காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் வருடத்தில் ஒரு நாள் காஷ்ட மவுனம் இருப்பார். அதாவது சிறு சப்தம் கூட எழுப்பாமல் முழுமையான மவுனத்தில் இருப்பார். முப்பது வருடங்களுக்கும் மேலாக அப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை பெரியவர் காஷ்ட மவுனத்தில் இருந்தபோது இந்திரா காந்தி அவரைப் பார்க்க வந்தார். அப்போதும் பெரியவர் தன் மவுனத்தைக் கலைக்கவில்லை. கை ஜாடையால் பெரியவரிடம் ஆசி மட்டும் வாங்கிக் கொண்டு போனார் அன்னை இந்திரா. திருவாடனை என்னும் ஊரில் இருந்தார் காஞ்சி மகான். அன்றைய தினம் காஷ்ட மவுன விரதம் இருக்கத் துவங்கினார். ஏராளமான பக்தர்கள் வந்து மவுனத்தில் ஆழ்ந்திருந்த மகானை வணங்கிவிட்டுச் சென்றார்கள். அந்தக் கூட்டத்தில் சங்கரன் என்ற பெரியவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடிபட்டு, தன் இரு கண் பார்வையையும் இழந்தவர். மடத்துச் சிப்பந்தி ஒருவர் வந்திருந்த பக்தர்களைப் பெரியவரிடம் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்க, சுவாமிகள் மவுனமாக அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். சங்கரனின் முறை வந்தது. அவரைப் பார்த்த காஞ்சி மகான், என்ன சங்கரா? எப்படி இருக்கே? சவுக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும் கூட உன்னால் முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே? என்று உரத்த குரலில் கேட்டபடி ஆசி வழங்கினார்.
மடத்து சிப்பந்திகள் எல்லாம் அதிர்ந்து போனார்கள். முப்பது வருடமாக கடைப்பிடித்து வந்த ஒரு விஷயத்தை பெரியவர் முறித்து விட்டாரே என்பதுதான் காரணம். ஒரு சிப்பந்தி, மறுநாள் பெரியவரிடம், எல்லோருக்கும் மவுனமா ஆசி வழங்கினது மாதிரி சங்கரனுக்கும் செஞ்சிருக்கலாமே? அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா? என்று தயங்கித் தயங்கிக் கேட்டார். பெரியவர் புன்னகைத்தபடியே எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. அவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். நான் மவுனமா ஆசி வழங்கினேன்னா அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசி வழங்கினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப் படுவான். இந்த தேசத்துக்காகத் தன்னோட கண்ணையே தானம் செஞ்சவன் அவன், அவனுக்காக நான் என்னோட ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லை என்று பெரியவர் நிதானமாக கூறினார். மற்ற யாரையும்விட நாட்டுக்காக உழைப்பவர்களிடம் இறைவன் என்றுமே அதிக அன்புடன் இருப்பான்!