தியாகராஜ சுவாமிகள் உஞ்சவிருத்தி வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் உணவின்றி பட்டினி கிடக்க நேர்ந்தது. அன்றிரவு அவரது வீட்டின் கதவு தட்டப்பட்டது. ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்த தியாகராஜர் கதவைத் திறந்தார். வாசலில் ஒரு வயதான தம்பதியும், அவர்களின் வேலைக்காரர் ஒருவரும் வந்திருக்கக் கண்டார். அவர்களை முகம் மலர்ந்து வரவேற்ற தியாகராஜர், விருந்தினரை உபசரிக்கத் தம்மிடம் ஒன்றுமில்லாததை நினைத்துப் பெரிதும் வருந்தினார். ஆனால் அந்தத் தம்பதியரோ, எங்களிடமே உணவு சமைக்கத் தேவையான அனைத்தும் இருக்கின்றன என்று கூறி, தங்கள் வேலைக்காரனை உடனே உணவு சமைக்குமாறு பணித்தனர்.
உணவு தயாராகி சுவாமிக்கு நிவேதனம் செய்த பிறகு அனைவரும் பசியாற உண்டனர். விடியற்காலையில் விருந்தாளிகள் விடைபெற்றுக் கொண்டனர். அப்போது, நீ நல்ல பேரும் புகழும் அடைவாயப்பா! என்று கூறி தியாகராஜரை வயதானவர் வாழ்த்தி, அரவணைத்தார். அவர்கள் முன்னே செல்ல, வழியனுப்ப வாசலுக்கு வந்த தியாகராஜர், சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். காரணம் அங்கே யாருமே இல்லை. அங்குமிங்கும் அலைந்து தேடியும் அவர்களைக் காண இயலவில்லை. தியாகராஜருக்கு உண்மை புலப்பட்டுவிட, ஆ! என் பசியாற அமுது படைத்துச் சென்ற அவர்கள் சாட்சாத் ஸ்ரீராமனும், சீதையும் அனுமனும் அல்லவா! அதை நான் அறியாமல் போனேனே? என்னே அவர்கள் கருணை! என்று புலம்பி மனம் உருகினார்.