காளியம்மாள்... கருப்பு நிறம்... அழகு ரொம்பக்குறைவு. இருந்தாலும், சிவந்த நிறம், நல்ல அழகு, பங்களா, கார், நிலபுலன்கள் உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்று பெற்றவர்களிடம் கூறினாள். சில பெண்களுக்கு நல்ல நேரம்... அவள் எப்படிப்பட்ட குணம் உள்ளவளாக இருந்தாலும், ஒரு பைத்தியக்காரன் சிக்குவான். அப்படித்தான் சிக்கினான் முருகவேல். காளியம்மாள் எதிர்பார்த்த அழகு, சொத்து வசதியுடன் குணவானாகவும் அமைந்தான். பக்திமானான அவன் காளியம்மாளை கண்ணுக்கும் மேலாக கவனித்தான். அவனது அன்பை பயந்தாங்கொள்ளி தனம் என நினைத்துக் கொண்ட காளியம்மாள், முருகவேலின் மனம் புண்படும்படி பேசுவாள். அவள் என்ன முடிவெடுத்தாலும் முருகவேல் தலையாட்டினான். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தனர். முருகவேல், இறையடியார்களில் ஒருவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிடச் சொல்வான். காளியம்மாளுக்கு இதில் விருப்பமில்லை. எப்படி யாவது, அதற்கு முடிவு கட்ட எண்ணி விட்டாள்.
ஒருநாள், அடியவர் ஒருவரை முருகவேல் அழைத்து வந்தான். மனைவியை சமைக்கச் சொல்லிவிட்டு, பக்கத்து தெருவிற்கு தயிர் வாங்கப் போய்விட்டான். அப்போது, காளியம்மாள் அம்மிக்குழவி ஒன்றிற்கு மாலை போட்டு அடியவரின் கண்ணில் படும்படி வைத்தாள். அடியவர் அதுபற்றி விசாரிக்க, சாமி! என் கணவர் இந்தக்குழவியை மாலை போட்டு அலங்கரிப்பாரு. இங்கு வரும் அடியவர்கள் சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் தலையில் போட்டு கொன்று விடுவார். நீங்களாவது தப்பிச்சுடுங்க. அவர் வருவதற்குள் இங்கிருந்து போயிடுங்க! என்று ஒரு போடு போட்டாள். இரக்க மனமுள்ளவளே! தகவல் சொன்னதற்கு நன்றி! என்று சொல்லிவிட்டு, அடியவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பறந்து விட்டார். தயிருடன் திரும்பிய முருகவேல், அடியவரைக் காணாமல் தவிக்கவே, இந்தா பாருங்க! நான் அம்மியிலே மசாலா அரைச்சுட்டு இருந்தேன். அந்தப் பெரியவர், இந்த அம்மிக்குழவி சிவலிங்கம்போல இருக்கிறதென்று பூஜை செய்யக் கேட்டார். யாராச்சும் குழவியைக் கொடுப்பாங்களா! இதைத் தர முடியாது. இது என் மாமியார் எனக்கு ஆசை ஆசையாய் கொடுத்தாங்கன்னு சொன்னேன். அவர் கோவிச்சுகிட்டு போயிட்டாரு. இப்ப தான் கிளம்பினாரு. நீங்க வேணா அவரை தேடி கூட்டிகிட்டு வாங்க, என்றாள்.
முருகவேல் அம்மிக்குழவியை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு ஓடினான். தன் பின்னால் முருகவேல் அம்மிக் கல்லுடன் ஓடிவருவதைப் பார்த்த அடியவர், ஆஹா... இவன் நம்மைக் கொல்லாமல் விடமாட்டான் போலிருக்கிறதே! என எண்ணி ஓட்டம் பிடித்தார். ஆனாலும், முதுமையால் தள்ளாடி ஓரிடத்தில் விழுந்து விட்டார். தன்னை நெருங்கிய முருக வேலிடம், நான் உனக்கு என்னப்பா துன்பம் செய்தேன். என்னை ஏன் கொல்லவருகிறாய்? என்று கேட்ட அடியவரிடம், சாமி! நீங்கள் இந்தக் குழவியை லிங்கமாக வழிபட கேட்டீர்களாமே! என் வீட்டு குழவி லிங்கமாக மாறும் பாக்கியம் பெற்றதென்றால் அதில் எனக்கும் பெருமை தானே! ஏற்றுக் கொள்ளுங்கள், என்றதும், அப்படி நான் ஏதும் கேட்கவில்லையே, என்ற அடியவர், காளியம்மாள் சொன்னதைத் தெரிவித்தார். உண்மை வெளிப் படவே, காளியம்மாளின் குரூர குணம் சற்றும் மாறாதது பற்றியும், இத்தனை நாள் அவள் மீது அன்பு செலுத்தியும், தன் சிறிய ஆசைகளைக் கூட அவள் நிறைவேற விடமால் தடுப்பது குறித்தும் முருகவேல் வருத்தப் பட்டான். தன் மனைவியின் செயலுக்காக மன்னிப்பு கோரியவன்,சுவாமி! இனியும் அந்தப் பெண்ணுடன் வாழ முடியாது. நானும் உங்களுடன் யாத்திரையாக வருகிறேன். இனி நீங்களே என் குரு, என்றான். அவர்கள் காசி நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கணவனைப் பிரிந்த காளியம்மாள் தனிமையில் தவித்து வருகிறாள். நல்ல கணவர் கிடைத்தும், மனம் ஒருமித்து வாழ மறுக்கும் பெண்களின் கதி காளியம்மாளை போல் தான் ஆகும்.