ஜாபாலா என்ற பெண்மணிக்கு ஸத்யகாமன் என்றொரு மகன் இருந்தான். ஆன்மிக உணர்வோடிருக்கும் அவன் தன் நண்பர்களெல்லாம் உபநயனம் செய்து கொண்டு வேதம் கற்க பாடசாலைக்குப் போவது கண்டு, தானும் தனக்குப் பூணூல் போட்டுக் கொண்டு குருகுல வாசம் செய்யும் ஆசையை அன்னையிடம் தெரிவித்தான். அப்போது அவன், தாயே, என் கோத்ரம் என்ன என்று சொல்லுங்கள் என்று கேட்ட போது ஜாபாலா, மகனே, நீ பிறந்த சில காலத்துக்குள் உன் தந்தை மரணம் அடைந்து விட்டார். அவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக அவதியுற்றிருந்ததால், ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. அவரிடமிருந்து கோத்திரத்தை அறிய முடியாமலேயே போய்விட்டது. எனக்கு யவுவனத்தில் ஏற்பட்ட தாங்கமுடியாத துக்கத்தில் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன். நீ என் பெயரான ஜாபாலாவின் மைந்தன் ஸத்ய காமன் என்று கவுதம மகரிஷியிடம் சொல் என்றாள். ஸத்யகாமன் கவுதம ரிஷியை அணுகி நடந்த விவரங்களைச் சொன்னான். அவனது ஆர்வத்தையும், முகப்பொலிவையும் கண்ட முனிபுங்கவர் கவுதம ரிஷி, அவன் மீது கருணை கொண்டு அவன் உபநயனமும், பிரும்மோபதேசமும் பெறத் தகுதியுள்ளவன் என்பதை உணர்ந்து, ஹோமம் செய்ய சமித்துக்களைக் கொண்டு வரச்செய்து உபநயனம் செய்து வைத்தார். பிறகு நானூறு நோஞ்சான் பசுக்களை அவன் வசம் ஒப்படைத்து அவற்றைப் புஷ்டியாக்கி விருத்தி செய்து, கொண்டு வரும்படி ஏவினார். குரு ஆணையை சிரம் மேற்கொண்டு, அவற்றை ஆயிரமாய் ஆக்கிப் புஷ்டி யுள்ளதாய்க் கொண்டு வருவேனென்று சொல்லி, பெரிய காட்டினுள் ஓட்டிச் சென்றான்.
சில வருஷங்களில் பசு மாடுகளைப் பக்தி சிரத்தையுடன் மேய்த்து, வேளாவேளைக்குத் தீனிபோட்டு, கழுநீர் கொடுத்து, குளிப்பாட்டி, முறையோடு செய்து வந்ததைப் பார்த்த வாயு தேவதை ஒரு நாள் காட்டில் அவன்முன் எருது வடிவு எடுத்து வந்து தோன்றி, பிரும்மத்தை ஜோதிஸ்வரூபமாய் உபாசனை செய் என்று உபதேசித்தது. பிறகு அக்னிதேவன் இன்னொரு நாள் ஓர் எருதினுள் புகுந்தபடி அசரீரியாய் இன்னொரு வேத மந்திரத்தை உபதேசம் செய்தான். அதே போல சூரியனும், பிராண தேவதைகளும் உபதேசங்களைச் செய்தனர். அவர்களின் ஆணைப்படி பசுக்களை தன் குரு நாதரிடம் திருப்பி ஒப்படைக்கச் சென்றான். அப்போது பசுக்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து எல்லாம் கொழு, கொழு என்று புஷ்டியோடு வளர்ந்திருந்தன. கவுதம ரிஷி மிகவும் மகிழ்ந்து போய் அவனிடம் விசாரிக்க, அவன் பசுக்களை நன்கு சம்ரட்சித்ததால் வாயு, அக்னி, சூரியன், பிராணதேவதைகள் எல்லோரும் நேரில் தோன்றி ஞானோபதேசம் அருளியதைக் கூறினான். அத்துடன் குருதேவா, அனைத்தும் உங்களுடைய வழிகாட்டுதலால் எனக்குக் கிடைத்த பேறு. அத்தனை இருந்தும் குருநாதரான உங்கள் மூலம் நேர் முகமான ஞானோபதேசம் பெற விரும்புகிறேன் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் குரு சிஷ்ய முறையோடு சத்ய காமனுக்கு ÷ஷாடச கலா வித்யை உபதேசித்தார் கவுதம ரிஷி.