கடலரசனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எனக்குள் கலக்கும் இந்த நதிகள் பல பெரிய மரங்களைக் கூட அடித்துக் கொண்டு வந்து, எனக்கு இரையாக்குகின்றன. ஆனால், நான் தர்ப்பணம் முதலானவை செய்ய தர்ப்பை புல்லைக் கொண்டு வருவதில்லை. ஏன்...பெயருக்கு ஒரு நாணல், இன்னும் பசுக்கள் தின்னும் புல்லைக் கூட கொண்டு வருவதில்லை. ஏனோ... என்பது தான் அந்த சந்தேகம். ஒருநாள், தன் சந்தேகத்தை அவன் கங்காதேவியிடம் கேட்டான்.
அதற்கு அவள், உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் மாமன்னரே! எங்கள் நீரை உறிஞ்சி, எங்களையே நம்பி உணவு உண்ணுகின்ற மரங்கள், எங்களைக் கண்டால் தலை சாய்த்து வணக்கம் தெரிவிப்பதில்லை. ஆனால், தர்ப்பை, நாணல் முதலான புற்களோ நாங்கள் ஆக்ரோஷமாக வந்தாலும், அமைதியாக நடந்தாலும் எங்களுக்குள் தங்கள் தலையைப் புதைத்து வணக்கம் தெரிவிக்கின்றன. பணிவுள்ளவர்களே உலகில் அதிக நாள் வாழ முடியும். அவர்கள் அமிர்தம் குடித்த தேவர்களுக்கு ஒப்பானவர்கள். இப்போது புரிகிறதா, காரணம் என்னவென்று.. என்றது. கடலரசன், இந்த அரிய ரகசியத்தை அறிந்து கங்கா மாதாவை வணங்கிச் சென்றான்.