சிலர் நம்மிடம் பணஉதவி கேட்பார்கள். செய்து விடுவோம்! செய்தபிறகு, இவனுக்கு போய் உதவினோமே! அந்தப்பணம் மட்டும், நம் கையில் இருந்திருந்தால், ஏதோ ஒரு செலவுக்கு பயன்பட்டிருக்கும், என்று தங்களுக்குள்ளேயே புலம்புவார்கள். இந்த அரைகுறை தானத்தால், என்ன விளைவு ஏற்படும் தெரியுமா? விஸ்வாமித்திரரின் மகன் பிரதர்த்தனன் ஒரு நாட்டின் மன்னன். ஒருமுறை, நாரதர் அவனுடன் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் சென்று கொண்டிருந்தார். வழியில், ஒரு பிராமணர், மன்னா! எனக்கு ஒரு குதிரை வேண்டும், என்றார். பிரதர்த்தனன் தன் தேரில் கட்டியிருந்த ஒரு குதிரையைக் கொடுத்து விட்டான்.
அடுத்தடுத்து வந்த இன்னும் மூன்று பிராமணர்கள் அதே போல குதிரை கேட்கவே, நான்கு குதிரைகளையும் கொடுத்து விட்டான். பின், தேரின் நுகத்தடியை, அவனே பிடித்து இழுத்துச் சென்றான். தானம் கேட்பவர்களே இப்படித்தான்! நேரம் காலம் தெரியாமல் வந்து கேட்டு பிராணனை வாங்குகிறார்கள், என சலித்துக் கொண்டான். நாரதர் அவனிடம், தானம் கொடுத்தபிறகு சலித்துக் கொள்பவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடையாது. அவன் சொர்க்கம் செல்ல தகுதியற்றவனாகி விடுகிறான், என்றார். இவ்வளவு தானம் செய்தும், சலித்துக் கொண்டதால் பலன் இழந்தோமே, என பிரதர்த்தனன் அதிர்ந்து போனான். இனியேனும், பிறருக்கு உதவி செய்தவர்கள், அதைச் செய்திருக்க வேண்டாமோ என சலித்துக் கொள்ள வேண்டாம். சரிதானே!