துஷ்யந்தன் ஒருமுறை, காட்டுவழியே விமானத்தில் வந்த போது, சிங்கக்குட்டியுடன் விளையாடும் ஒரு சிறுவனைக் கண்டான். ஆச்சரியப்பட்ட அவன், விமானத்தை இறக்கினான். தம்பி! சிங்கத்துடன் விளையாடுகிறாயே! பயமாக இல்லையா! சிறுவன் சிரித்தான். நாம் மனிதர்கள். சிங்கத்தை விட ஓரறிவு அதிகமுள்ளவர்கள், பயப்படலாமா? சிறுவனின் பதில் மகாராஜாவை சிந்திக்க வைத்தது.இவன் வீரன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட... அப்போது சில பெண்கள், அவனை அழைக்க வந்தார்கள். பரதா! கிளம்பு! முனிவர் மரீசி உன்னை அழைக்கிறார்,. ஆம்... அவனது பெயர் பரதன். சற்று பொறுத்து வருகிறேன். ஆமாம்... அம்மா எங்கே? அன்னையார் நீராடச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் வந்து விடுவார்... என்றவர்கள் அதிர்ந்தனர். பரதா! உன் கையில் கட்டியிருந்த ரøக்ஷ (மந்திரக்கயிறு) எங்கே? சிறுவனும் அப்போது தான் கவனித்தான். ஐயையோ! அதை எப்படியாவது தேடிப் பிடியுங்கள். ரøக்ஷயைத் தொலைத்தால், முனிவர் என்னைத் தொலைத்து விடுவார்,.
ஒரு செடியின் அடியில் கிடந்த ரøக்ஷயை துஷ்யந்தன் எடுத்துக் கொடுத்தான். அந்தப் பெண்கள் முன்பை விட அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ஐயா! தாங்கள் யார்? இந்தக் கயிறை இந்தச் சிறுவனின் தந்தையும், தாயும் தவிர மற்றவர்கள் தொட்டால் பாம்பாகி விடும் என முனிவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் இவனது தந்தையா? இதற்குள் அவனது தாய் அங்கு வர, துஷ்யந்தன் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
சகுந்தலா அவன் அழைத்ததும், அவள் அதிர்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டாள். சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்த்த போது, நீ யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். இப்போது நினைவு வந்து விட்டதா? துர்வாசரின் சாபத்தால் ஏற்பட்ட விளைவுகளை சகுந்தலாவிடம் விளக்கினான். அவனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த வீரத்திருமகனான பரதனே நம்மை ஆண்ட மாபெரும் சக்கரவர்த்தி. அவரது பெயரால் தான் நம் தாய்த்திருநாடு பாரதம் எனப்படுகிறது.