ஒரு ஞானியை பார்க்க, நண்பர் களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். வழியில் ஒரு வீட்டுச்சுவரில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், காட்டுமிராண்டி என்று எழுதப்பட்டிருந்தது. இதுபற்றி ஞானியிடம் கேட்டார். ஞானி அவரிடம் ஒரு தண்ணீர் கோப்பையை கொடுத்து, இதை நீங்கள், கையை நீட்டி பிடித்தபடி வைத்திருங்கள், என்றார். அவரும் அப்படியே செய்தார். சிறிது நேரம் கழிந்தது. ஞானி அவரிடம் கேட்டார். இப்போது என்ன தெரிகிறது? கை வலிக்கிறது ஞானி கேட்டார்: இன்றும் ஒரு மணிநேரம் கையை நீட்டி கோப்பையை வைத்திருந்தால் என்னகும்?. கை மரத்துப்போகும். வலி குறைய வழி என்ன? கோப்பையை கீழே வைப்பது தான். அப்படியே செய்யுங்கள், என்றார் ஞானி.
ஞானி கூறினார், நம்மில் பல பேர் இப்படித்தான், மனதில், பல சுமைகளை, பாரங்களை, வேதனைகளை, பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சுமந்து கொண்டிருக்கிறோம். அந்த பாரத்தால் மனதில் வலி உண்டாகிறது. மனிதனில் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் மனம் தான். மனதிலுள்ள பாரத்தை, இறைவனிடம் இறக்கி வைத்தால், மனம் எளிதாகும். நம்பிக்கை தான் வாழ்க்கையின் ஆதாரம். இறை நம்பிக்கையும், பிரார்த்தனை செய்வதும் ஓர் மனோதத்துவமான இயற்கை வைத்தியம். மனதை வலிமைப் படுத்தும் யோக சாதனை. கடவுளை வணங்குவோர் முட்டாள்களல்ல, என்றார்.