ஆஸ்ரமத்தில் இருந்த அந்த சீடனுக்கு திருமண ஆசை வந்து விட்டது. துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றெண்ணிதான் அங்கு அவன் வந்தான். ஆனால், ஏனோ மனம் அதில் லயிக்கவில்லை. அவன் அங்கே சமையல் பணிகளைக் கவனிப்பான். அத்துடன் குரு நாதருக்கு கை கால் கழுவ தண்ணீர் எடுத்து வைப்பது, கைகளைத் தேய்த்துக் கழுவ மண் எடுத்துக் கொடுப்பது ஆகிய பணிகளைச் செய்வான். ஒருமுறை, சாப்பாட்டில் புளி, காரம் வழக்கத்தை விட அதிகம் சேர்த்திருந்தான். துறவு வாழ்க்கை மேற்கொள்ள எண்ணுவோர் இதைக் குறைப்பதே வழக்கம். இந்த சாப்பாடு விஷயமே, அவனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டது என்பதை குருவுக்கு உணர்த்தி விட்டது. ஒருநாள், குருவுக்கு கை கால் கழுவ மண், தண்ணீர் செம்பைக் கொடுத்து விட்டு கைகட்டி வாய் பொத்தி நின்றான். தன் கையில் இருந்த மண்ணை அவனிடமே திருப்பிக் கொடுத்த குரு, சீடனே! உனக்கு கல்யாண ஆசை வந்து உள்ளதை நான் அறிவேன். அதில் ஒன்றும் தவறில்லை. உன் இஷ்டப்படி நீ நடந்து கொள்ளலாம். இந்த மண்ணை உன் துண்டில் முடிந்து கொள்.
நீ கிளம்பலாம். உனக்கு திருமணம் நல்லபடியாக நடக்கும். என் நல்லாசிகள், என்று கூறி விடை கொடுத்தார். குருவே, ஆசிர்வதித்து விட்டதால் மகிழ்ச்சியடைந்த சீடன், அவர் கொடுத்த மண்ணை துணியில் முடிந்து கொண்டு கிளம்பினான். ஊருக்கு செல்லும் வழயில் ஓரிடத்தில் இருட்டாகி விட்டது. ஒரு வீட்டின் திண்ணையில் படுத்தான். குருநாதர் கொடுத்த மணல் முடிந்த துணியை, திண்ணை கூரையில் இருந்த கம்பில் கட்டித் தொங்கவிட்டான். படுத்தவன் களைப்பில் தூங்கி விட்டான். இரவானதும், ஏதோ சூடு உடலில் படுவது போல் தெரிந்தது. கண்விழித்துப் பார்த்தால், கூரையில் கட்டிய துணியில் இருந்து நெருப்பு பறந்து கொண்டிருந்தது. அங்கு நின்ற ராட்சஷன் மீது அது பாய்ந்தது. அதன் உக்ரம் தாள முடியாமல் அவன் தடுமாறினான். சீடனிடம் வந்து, வாலிபனே! நான் ஒரு ராட்சஷன். இந்த வீட்டுக்குள் அவசரமாகச் செல்ல வேண்டும். ஆனால், நீ கட்டியுள்ள துண்டில் இருந்து பறந்து வரும் நெருப்பு என்னை கடுமையாகச் சுடுகிறது. என்னால், உள்ளே போக முடியவில்லை. அந்தத் துண்டை அவிழ்த்து விடு, நான் உனக்கு ஒரு குடம் நிறைய தங்கக்காசுகள் தருகிறேன், என்றான்.
எதற்காக நீ உள்ளே போக வேண்டும் என்கிறாய்? சீடனின் கேள்விக்குப் பதிலளித்த ராட்சஷன், இந்த வீட்டில் உள்ளவன் கடந்த ஜென்மத்தில் என் குழந்தைகளைக் கொன்று விட்டான். அவனைப் பழிக்குப் பழி வாங்கும் விதத்தில் அவனது ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன். இப்போது எட்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதைக் கொல்ல வந்துள்ளேன், பாவம் செய்தவன் தண்டனையை அனுபவித்தாக வேண்டும், எனக்கு வழிவிடு என்று பணிவும் கண்டிப்பும் கலந்த குரலில் சொன்னான். சரி..சரி...நீ முதலில் தங்க குடத்தைக் கொடு. நான் துணியை அவிழ்த்து விடுகிறேன், என்று சீடன் சொன்னதும், கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கக்குடம் ஒன்றை வரவழைத்து கொடுத்தது. அதைப் பெற்றுக் கொண்ட சீடன், துண்டை அவிழ்த்து உள்ளிருந்த மண்ணை எடுத்து, ராட்சஷனின் மேல் வீசினான். அவன் கதறியபடியே சாம்பலானான். அப்போது, வீட்டுக்கதவு திறந்தது. வீட்டுக்காரர் சீடனுக்கு நன்றி சொன்னார். நான் போனபிறவியில் செய்த தவறுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். தங்கள் அருளால் இனி பிழைத்தேன். அன்பரே! தாங்கள் செய்த உதவிக்கு கைமாறாக என் தங்கையை உங்களுக்கு திருமணம் செய்துவைக்கிறேன், என்றார். அவர்களின் திருமணம் இனிதே நடந்தது. தங்கக்காசு கொண்ட குடமும் இருந்ததால் தம்பதியர் செல்வச்சிறப்புடனும் வாழ்ந்தனர். இவ்வளவு மகிமை மிக்க மண்ணைத் தந்த அந்த குரு யார் தெரியுமா? ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்....!