குருகுலத்தில் வேதபாடத்தை நடத்த குருநாதர் ஆயத்தமானார். அன்றைய பாடம் உபநிஷதம் பற்றியதாக அமைந்தது. கடவுளை அடைவதற்கு குரங்கு நியாயம், பூனை நியாயம் என்னும் வழிகள் இருப்பது பற்றியது அன்றைய பாடம். பாடத்தை தொடங்கும் முன், சீடன் ஒருவனை நோக்கி,நீ குரங்கா? பூனையா? என்று கேட்டார்.சரிதான்! ரொம்ப படித்ததில் குருவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலிருக்கிறது என்று மனதிற்குள் எண்ணிய சீடன், தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி, குருவே! நான் மனிதன் என்றான் வேகமாக. அவனிடம் குரு, நீ மனிதன் தான்! ஆனால், மனிதன் இறைவன் மீது பக்தி செலுத்துவதில் குரங்கு நியாயம், பூனை நியாயம் என்று இருவிதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்.
குட்டிக்குரங்கு இருகைகளாலும் இறுக்கமாகத் தாயைக் கட்டிக் கொள்வது போல, பக்தன் கடவுளை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது ஒருவகை. தாய்ப்பூனை குட்டிப் பூனையை தன் வாயால் கவ்விக் கொண்டு திரிவது போல, பக்தன் கடவுளையே சரணடைவது இன்னொரு வகை! இதில் நீ எந்தவகை பக்தியை விரும்புகிறாய் என்பதையே அவ்வாறு கேட்டேன், என்றார். சீடன் அவரிடம், ஊகூம் நான்தேனீ!, என்றான். குருவே! மலர்கள் காற்றில் வாசனையை பரப்புகிறது. அதை நாடி தேனீ பறந்து செல்கிறது. மலரைத் தேடி சுதந்திரமாகப் பறக்கும் தேனீயைப் போல நான் இருக்கிறேன். கடவுளும் மலரைப் போல எனக்கும் அருளை வாரி வழங்க காத்திருக்கிறார். நானும் தேனீயும் இன்பத்தேனை பருகப் போவது உறுதி!, என்றான். சீடனின் புத்திசாலித்தனமான பதிலைக் கேட்ட குரு வியந்து பாராட்டினார்.