சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார். ஏழாயிரம் பேர் அமர்ந்திருந்த கொலம்பஸ் ஹாலில் வீர உரையாற்றினார். அமெரிக்க பத்திரிகைகள் சுவாமிஜியைப் புகழ்ந்து தள்ளியிருந்தன. அங்கு மாட்டுப்பண்ணை நடத்திய கௌபாய்ஸ் எனப்பட்ட இளைஞர்கள், சுவாமியைப் பற்றி அறிந்தனர். அவரது பேச்சு அவர்களுக்கு பிடிக்கவில்லை. தங்கள் பண்ணைக்கு அழைத்து வந்து, சுவாமியை மிரட்டி அவமானப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர். தங்கள் பண்ணைக்கு வந்து உரையாற்றுமாறு அழைத்தனர். அவர்களின் நோக்கம் அறியாத சுவாமியும் அங்கு சென்றார். அங்கே மேடை ஏதும் இல்லை.
வந்திருந்த கூட்டமும் மிகமிகக் குறைவு. முதலில், அந்த இளைஞர்கள் மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் மரத் தொட்டிகளைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் ஸ்டேஜ். நீங்கள் இதில் ஏறி நின்று பேசுங்கள், என்றனர். வழியிருந்தால் கடுகுக்குள்ளே கடலைக் காணலாம் என்ற எண்ணமுள்ளவராயிற்றே சுவாமிஜி! அவர், அந்த பலகை மீது ஏறி நின்று பேசத் துவங்கினார். அப்போது வேகமாக ஏதோ பறந்து வந்தது. பேச்சில் லயித்து விட்ட சுவாமிஜி, தன்னை நோக்கி ஏதோ வருகிறதென தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அந்த இளைஞர்கள் தங்கள் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். சுவாமி குண்டுக்கு பயந்து ஓடுவார். நாம் கைதட்டி மகிழலாம் என்பது அவர்களது எண்ணம். ஆனால், சற்றும் கலங்காத சுவாமிஜி, பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மலையே சாய்ந்தாலும் அதைச் சிலையாக்குவாரே தவிர, அதற்காக கலங்கமாட்டார் இந்த மாவீரர் என்பதைப் புரிந்து கொண்ட அந்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டனர்.