ஒரு மாந்தோப்பு வழியாக அப்பாவும் பிள்ளையும் சென்று கொண்டிருந்தனர். பிள்ளை அப்பாவின் தோளில் அமர்ந்திருந்தான். அவன் தோட்டக்காரனுக்குத் தெரியாமல் இரண்டு மாங்காயைத் திருடினான். வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் கொடுத்தான். கெட்டிக்காரப்பிள்ளையைப் பெற்றதை எண்ணி சந்தோஷத்தில் அப்பா, அவனை ஏ மாங்கா என்று செல்லமாக அழைத்தார். சிறுவன் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தான். அவனோடு சேர்ந்து திருட்டும் வளர்ந்து விட்டது. அரண்மனையிலேயே திருடும் அளவுக்கு துணிந்து விட்டான். ஒருநாள் ராணியின் விலை உயர்ந்த வைரமாலை காணாமல் போனது. திருடனைப் பிடித்து தண்டிக்க மன்னர் உத்தரவிட்டார். காவலர்கள் காட்டில் ஒளிந்திருந்தமாங்காய் திருடனைப் பிடித்து வைரமாலையை மீட்டு வந்தனர்.
மன்னர் முன்னிலையில் விசாரணை நடந்தது. திருடனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவனைக் கொலைக்களத்துக்கு கொண்டு சென்ற வேளையில், அந்தத் திருடனின் பெயரோடு சேர்ந்திருக்கும் மாங்காய் பற்றிய விபரத்தை மன்னர் கேட்டார். மன்னா! சிறுவனாக இருந்தபோது, என் அப்பாவின் ஆதரவுடன் இரு மாங்காயைத் தோட்டக்காரனுக்குத் தெரியாமல் திருடினேன். அன்றுமுதல் என்னுடைய அப்பா,மாங்கா என்று செல்லமாக அழைத்தார். இன்று பெரிய திருடனாகி அதற்குரிய விலையாக உயிரையே இழக்கப் போகிறேன் என்று அழுதான். அவனது கதையைக் கேட்ட அனைவரும், பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும்என்ற உண்மையை உணர்ந்தனர்.