ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள், என்றான். “ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டு மொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது, என்றார் வேடிக்கையாக. அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது. “அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன், என்றான். சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.
உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர், என்றார் சனீஸ்வரர். நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன், என்றார் சுக்கிரன். இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது. சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை யுத்த கிரகம் என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும், என்றார் சனீஸ்வரர். அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா? என்றார் பிரகஸ்பதியான குரு.
புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும், என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார். குழந்தைக்கு குளிகன் என்று பெயரிட்டார். இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது. இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர். யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,என்றார் சனீஸ்வரர். குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.