சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற் போல் மாறிக்கொள்ளுகிற மனிதர்கள் உலகில் பெருகி விட்டார்கள். புலி ஒன்றுக்கு கடும் பசி. காட்டாறு ஒன்றின் கரையில் நின்ற அது, ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்ததால், நடுப்பகுதியில் ஒரு மணல்திட்டில் மேய்ந்து கொண்டு இருந்த எருமை ஒன்றைப் பிடிக்கச் சென்றது. புலி வருவதை பார்த்த எருமை வேகமாகச் சென்று ஒரு புதர் பகுதியில் மறைந்து கொண்டது. எருமையைக் காணாத புலி, அது வெளியே வரட்டுமே என காத்திருந்தது. எருமை வருவதாகக் காணோம். ஒரு பாறையில் படுத்திருந்தது. அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புலியால் எங்கும் செல்ல முடியவில்லை. திடீரெனக் கண்ணைப் பொத்தியது. இன்று எப்படியும் பட்டினி தான்! இதையே இறைவனை நினைக்கும் விரதமாகக் கருதிக்கொண்டால் என்ன! அது கண்மூடிதியானத்தில் ஆழ்ந்தது.
புலியின் சந்தர்ப்பவாத விரதத்தை தோலுரிக்க இறைவன் வந்து விட்டார். காணாமல் போன எருமையின் வடிவத்தில்! வெள்ளத்தில் அந்த எருமை மா...மா.. என கதறியபடியே தத்தளித்து வந்தது. சப்தம் கேட்டு புலி கண்களைத் திறந்தது. ஆகா! தேடி வந்தது கிடைத்து விட்டது என்றபடியே பாறையில் இருந்தபடியே எருமையின் கழுத்தைக் கவ்வி இழுத்தது. அங்கே இறைவன் பிரசன்னமானார். புலியே! நீ ஒரு சந்தர்ப்பவாதி. உணவு கிடைக்காவிட்டால் அதை விரதம் என்கிறாய். உணவைக் கண்டதும் அதை மறந்து விடுகிறாய். உனக்கு நிஜமான பக்தியில்லை. அடுத்தபிறவியில், புலியையும் விட கேவலமான ஜந்தாகப் பிறப்பாய், எனச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார். சந்தர்ப்பவாதிகளுக்குபிறவியின் நிலை தாழ்ந்து கொண்டே போகும்! புரிகிறதா!