சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை அதிமேதாவிகளாக வளர்ப்பதாக நினைத்து, கண்ணா! எதிர்த்த வீட்டு மாமாவை மிதிப்பேன் என்று சொல்லு! பாட்டியின் கன்னத்தில் அடி, தாத்தாவை போடா என்று சொல்லு! என்றெல்லாம் கற்றுத் தருகிறார்கள். நாம் எதைக் கற்றுத் தருகிறோமோ, அதுவே இறுதி வரைக்கும் பிஞ்சு மனதில் பதிந்து விடும். ஒரு துறவி இரண்டு கிளி வைத்திருந்தார். ஒருசமயம், அவர் வெளியூர் செல்ல நேரிட்டது. ஒரு கிளியை தனக்குத் தெரிந்த விவசாயி ஒருவரிடமும், இன்னொன்றை கசாப்புக்கடைக்காரரிடமும் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொன்னார். பத்துநாள் கழித்து ஊருக்கு திரும்பினார்.
விவசாயி வீட்டில் வளர்ந்த கிளி, ஐயா! வாங்க! பழம் சாப்பிடுறீங்களா! பால் சாப்பிடுறீங்களா! நீங்க போன காரியம் ஜெயமா? என்று குசலம் விசாரித்தது. துறவிக்கு மிக்க மகிழ்ச்சி. விவசாயியின் குடும்பத்தினர் தினமும் என்ன பேசுகிறார்களோ, அந்த வார்த்தைகளைக் கிளியும் கற்றுக்கொண்டதாக நினைத்து பெருமைப்பட்டார். அடுத்து கசாப்புக்கடைக் காரன் வீட்டுக்குப் போனார். ஏய்! கழுத்தைப் புடிடா! அரிவாளை நேரா வச்சுக்கடா! தலையை அமுக்குடா! ஒரே போடா போடுடா! வெட்டுடா! மடையா! சொல்றது புரியுதா! என்றது. ஆகா! கிளியை இங்கே விட்டது தப்பா போச்சு! ஆடு வெட்டும் போது, என்னவெல்லாம் சொன்னார்களோ அதை கிளி அப்படியே கற்றுக் கொண்டதே! என வேதனைப்பட்டார். குழந்தைகள் பெரியவர்களின் நடை உடை பாவனையை அப்படியே கடைபிடிப்பவர்கள். நீங்கள் நல்லவழக்கங்களைப் பின்பற்றினால், அவர்களும் உங்களைப் பின்பற்றுவர்.