சரியாகப் படி, ஒழுக்கமாக நடந்துகொள், காலையில் சீக்கிரம் எழுந்திரு, இரவில் டிவி முன் அதிக நேரம் உட்காராதே, பெரியவர்களை மதித்து நட, நல்ல நண்பர்களுடன் சேர், என்று பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறாத வீடு உண்டா? ஆனால், பிள்ளைகள் இதை அறிவுரையாக ஏற்காமல், தங்களைப் பெற்றோர் திட்டுவதாக நினைத்து முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருப்பார்கள். சில வீடுகளில் சண்டையே வந்துவிடும். இந்த வரிசையில் உள்ள பிள்ளையாக இருந்தால், இதைப் படியுங்கள். எம்.எல்.வசந்தகுமாரி என்ற புகழ்பெற்ற பாடகி இருந்தார். திருப்பாவையை அதிஅற்புதமாக பாடிய இவரது குரல் இன்றும் மார்கழியில் ஆன்மிக இல்லங்களில் ஒலிக்கிறது.
திரைப்படங்களிலும் புகழ்க்கொடி நாட்டியவர். மதுரைவீரன் படத்தில் இவர் பாடிய ஆடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ என்ற பாடல், இன்றும் மூத்த ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது. இவரது தந்தை ஐயாசாமி அய்யர். இவர், தன் மகள் இசையுலகில் கொடிகட்டி பறக்க வேண்டும் என ஆசைப்பட்டார். தன் மகளை அன்றைய பிரபல வித்வான்களின் முன்னிலையில் பாடச்செய்து குறை நிறைகளை அறிந்து கொள்ளச் சொல்வார். அந்தக் காலத்திலேயே வானொலியில் இசைநிகழ்ச்சிகள் நேர்முகமாக ஒளிபரப்பாகும். எம்.எல்.வி. அந்த நிகழ்ச்சிகளில் சிறப்பாக பாடுகிறாரா என ஐயாசாமி அய்யர் கவனிப்பார்.
நன்றாகப் பாடினால், மகளை வரவேற்க வாசலில் காத்திருப்பார். பாட்டு சரியில்லை என்றால், வாசல் பக்கமே வரமாட்டார். வசந்த குமாரியின் முகம் வாடிவிடும். சரியாகப் பாடவில்லையே என்று வருத்தப்படுவார். அடுத்த கச்சேரியை மிகவும் கவனமாகச் செய்வார். இதற்காக அவர் தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டதில்லை. காலம் செல்லச்செல்ல, அவர் இசையில் வெகுவாக தேறிவிட்டார். பிரபலமான தன் மகளையே, அவரது தந்தை இந்தளவுக்கு கண்டித்து வளர்த்ததால் தான் அவர் இசையுலகின் ராணியாகத் திகழ்ந்தார். இளைஞர்கள் இதைப் புரிந்து கொண்டு, பெற்றவர்களின் அறிவுரையை ஏற்க வேண்டும். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அவ்வையின் பொன்மொழி வீணாகி விடக்கூடாது.