பல பிரஷ்களையும், பேஸ்டையும் மாற்றினாலும், எப்படி தேய்த்தாலும், வேப்பங்குச்சி, உமிக்கரிக்கு மாறி பார்த்தாலும் வாய்நாற்றம் குறையவில்லையா? அப்படியானால், போன பிறவியில் ஒரு தவறு செய்திருக்க வேண்டும் என்கிறது புராணக்கதை. ராஜசூயயாகம் செய்து சாம்ராட் என்ற பட்டம் பெற்ற பிறகும், தர்மர் மனதில் ஏதோ குறை இருந்தது. அது நீங்க கிருஷ்ணரிடம் வழி கேட்டார். தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யச் சொன்னார் கிருஷ்ணர், தானம் துவங்கியது. பரிமாறியவன் பீமன். பெரிய பெரிய லட்டுகளை பந்தியில் வைத்தான். வந்தவர்களால் சாப்பிட முடியவில்லை. சாப்பிடுங்க! இல்லாட்டி என் கதையால் அடிச்சு கொன்னுடுவேன், என்று மிரட்டியே சாப்பிட வைத்தான். மறுநாள் அவனது மிரட்டலுக்கு பயந்து யாரும் வரவில்லை. கிருஷ்ணரிடம் இதுபற்றி சொன்னான். அப்படியா? என்ற கிருஷ்ணர், பீமா! கந்தமாதங்க மகரிஷி உன்னைப் பார்க்க வேண்டுமென்றார். போய் வா, என்றார். பீமன் அங்கே போனான்.
மகரிஷி அவனிடம் பேச ஆரம்பித்தார். வாயிலிருந்து பயங்கர துர்நாற்றம், ஊர் சாக்கடையெல்லாம் அவர் வாயில் தான் ஓடுகிறதோ! சுவாமி! மகரிஷியான உங்கள் வாயிலா இவ்வளவு நாற்றம்? பீமன் கேட்டான். அதை ஏன் கேட்குறே பீமா! போன பிறவியில் நான் பெரும் பணக்காரனாக இருந்தேன். கேட்டவர்க்கு கேட்டதெல்லாம் கொடுத்தேன். ஆனால், வந்தவர்களின் வறுமையைக் குத்திக்காட்டி, நீ தரித்திரன், உன் அப்பன் தரித்திரன், என்று சொல்லிக் கொண்டே வழங்கினேன். வந்தவர்கள் மனம் நொந்து வாங்கிக் கொண்டுபோனார்கள். அன்று அள்ளிக்கொடுத்ததால் மகரிஷி, வாய் பேசியதால் துர்நாற்றம், என்றார். ஐயையோ! நானும் என் வீட்டிற்கு வந்தவர்களை மிரட்டி சாப்பிட வைத்தேனே இனி கூடாது! என நினைத்த படியே நகர்ந்தான் பீமன். வாய் துர்நாற்றம் வேறு எங்கிருந்தும் வரலே! மனசுக்குள்ளே இருந்து தான் வருது! அதனாலே மத்தவங்க மனசு புண்படும்படி பேசாதீங்க! புரியுதா!