சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் சித்தர்கள். இவர்களில் சட்டைமுனி என்பவர் பிரபலம். இவர் கைலாஷ் சென்ற போது, குளிர்தாளாமல் கம்பளி அணிந்து கொண்டார். அதனால், இவரைக் கம்பளிச்சித்தர் என்றும் சொல்வார்கள். இவரது காலத்திலேயே சாமியார் வேடத்தில், சில அயோக்கியர்கள் இருந்துள்ளனர். ஆன்மிகம் என்ற பாலில் கலக்கும் சொட்டு விஷம் இவர்கள். இந்த ஆபத்தான பிராணிகளைப் பற்றி, அவர் ஒரு பாட்டு எழுதியுள்ளார். விருதன்றோ உலகத்தில் ஆசானென்று வேடமிட்டு வேடமிஞ்சி மோடியேற்றி விருதன்றோ பணம் பறித்துப் பிழைப்பார் ஐயோ! வேதாந்த மொன்றுமில்லை சாங்க மென்பார் விருதன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடமென்று மயக்காலே மயங்கிப்போனார். விருதன்றோ சீடருடைப் பாவமெல்லாம் விளையாட்டுப் போல் வாங்கி விழுந்திட்டாரே! என்பது அந்தப் பாடல்.
உலகத்தில் குரு எனக் கூறிக்கொண்டு வேடமிடும் சிலர், தாங்கள் வகுக்கும் ஆன்மிகமே சரியென சொல்லிக்கொண்டு, பணம் பறித்து பிழைப்பார்கள் என்பதை இப்பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார். வேடத்தால் பிறரை மயக்கும் இவர்கள், தாங்கள் விளையாட்டாக பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரவில்லை என பரிதாபப்படுகிறார். இன்றைய உலகில் பணம் மட்டுமின்றி, சில சாமியார்கள் மேலும் அத்துமீறியுள்ளதைக் காண முடிகிறது. இறைவன் படைப்பில் நிழல் தரும் ஆலமரமும் இருக்கிறது. கட்டையான கள்ளிச்செடியும் இருக்கிறது. நல்லதையும் கெட்டதையும் இணைத்திருக்கும் ஆண்டவனின் சூட்சுமத்தை நாம் அறிய முடியவில்லை. ஏனெனில், அவன் ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு, கெட்டதை விலக்கும் பக்குவம் உயிர்களுக்கு இருக்கிறதா என்று அவன் சோதித்துப் பார்க்கிறான். இந்த தேர்வில் வெற்றிபெற வேண்டியதே, ஒவ்வொரு மனிதனின் கடமை.