பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது. தமிழாசிரியர் சகவாச தோஷம் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். மாணவர்களே! படிக்கும் பருவம் மிக முக்கியமானது. உங்கள் நண்பர்களை பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒருவரை ஒருவர் கண்டதும் நட்பு பாராட்டி மாணவர்கள் நண்பராக மாறி விடுகிறார்கள். தீயவர்களிடம் பழகும் நல்லவனும் கெட்டுப் போவான். நல்லவர்களிடம் பழகும் தீயவனும் நல்லவன் ஆவான். அதனால், மாணவர்களாகிய நீங்கள் நல்லவர்களிடம் மட்டும் பழகுவதில் உறுதியாக இருக்கவேண்டும், என்று அறிவுரை சொன்னார்.
அப்போது ஒரு மாணவன், ஐயா! தீயவர்களுடன் பழகும் நல்லவன் அவர்களை திருத்த முயற்சிக்கலாமே! என்றான். அவனுக்கு சகவாச தோஷத்தின் தன்மையை விளக்கத் தொடங்கினார் அவர். ஒரு அண்டா நிறைய தண்ணீர் இருக்கிறது. அதில் ஒருகுவளை பாலை கலந்தால் என்னாகும்? தண்ணீரோடு பால் கலந்து தன் நிலையை இழந்து விடும். அதேசமயத்தில் ஒரு அண்டா பாலில் ஒரு குவளை தண்ணீரைச் சேர்த்தால்ல அது பாலின் தன்மையைப் பெற்று விடும். அதுபோல, நல்லவர்களோடு சேர்ந்தால் தீயவன் கூட நல்லவனாக மாறிவிட வாய்ப்புண்டு, என்றார். ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு சரியெனப் பட்டது.