ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்கு இரு நண்பர்கள் சென்று கொண்டிருந்தார்கள். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது என்பதால் பயணம் சில நாட்கள் நீண்டது. பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்த நண்பர்களிடையே திடீர் என்று சண்டை வந்தது. ஒருவன் மற்றவனை கன்னத்தில் அறைந்தான். அடிபட்டவன் உடனே மணற்பாங்கான ஓர் இடத்தைத் தேடிப்போனான். அந்த மணலில் என் நண்பன், என்னைக் கன்னத்தில் அறைந்து விட்டான் என்று எழுதி விட்டு, ஒன்றும் பேசாமல் பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் ஓரிடத்தில் புதைமணல் இருந்ததை அவன் கவனிக்கவில்லை. அதில் விழுந்து உயிருக்குப் போராடினான்.
அப்போது அவனை அடித்த நண்பன் அந்தப் பக்கமாக வந்தான். உடனே தன் உயிரையும் பொருட்படுத்தாமல் புதைமணலின் அருகே சென்று அதில் சிக்கி இருந்தவனைக் காப்பாற்றினான். உயிர் பிழைத்தவன் நன்றி சொல்ல, இருவரும் இணைந்து பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் ஓரிடத்தில் கற்பாறைகள் நிறைந்த குன்று ஒன்றிருந்தது. அந்தக் குன்றின் மீதிருந்த பாறை ஒன்றில், எனது தோழன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் என்னைக் காப்பாற்றினான் என்று கல்வெட்டாகப் பொறித்தான் உயிர் பிழைத்தவன்.இப்போது அடுத்தவனுக்கு சந்தேகம் வந்தது. அன்று சண்டை வந்தபோது அடித்தேன். அதனை மணலில் எழுதினாய். இன்று உன் உயிரைக் காத்ததை கல்லில் பொறித்து வைக்கிறாய். உன் இந்தச் செயலுக்கு என்ன காரணம்? என்று வினவினான். நண்பா, அன்று நீ என்னை அடித்தது மணலில் எழுதியதைப்போல அப்போதே என் மனதில் இருந்து மறந்து போக வேண்டும் என நினைத்தேன். இன்று நீ செய்த உதவி எப்போதும் என் மனதில் கல் மேல் எழுத்துப் போன்று நிலைத்திருக்க வேண்டுமென நினைப்பதால் இப்படிச் செய்தேன்...!
உங்கள் மனதில் யாரோ ஒரு உறவினர் அல்லது நண்பரால் ஏற்பட்ட எதிர்மறை விளைவு பதிந்திருக்கலாம். அதுவே <உங்கள் லட்சியத்திற்குத் தடையாக இருக்கலாம். முதலில் அதனை உங்கள் மனதில் இருந்து ஒதுக்குங்கள். களையப்பட வேண்டியவை என்று ஒரு கற்பனைப் பெட்டியை உங்கள் மனதில் உருவாக்கி அதனுள் அதனைப் போட்டு மூடுங்கள். இது ஒரு மந்திரப்பெட்டி இது உள்ளே போடுவதை வெளியே விடாது என முழுமையாக நம்புங்கள். அவ்வளவுதான் இனி அந்த எதிர்மறை எண்ணம் உங்கள் ஆழ்மனதின் ஆற்றலைக் குறைக்காது. இன்னும் உள்ள எதிர்மறை எண்ணங்களையும் களைந்து மொத்தமாக அந்தப் பெட்டியோடு தூக்கி எறிந்து விடலாம்.