கிருச்சமத முனிவருக்கு விதிப்பயனால் ஒரு அசுரக் குழந்தை பிறந்தது. அவன் பெயர் பலி. பலியை நல்வழிப்படுத்த நினைத்து விநாயகரை நோக்கி தவம் இருக்கும்படி பணிந்தார் கிருச்சமத முனிவர். பலி, விநாயகப் பெருமானை நோக்கி பல நூற்றாண்டுகள் தவமிருந்தான். அவனது கடுமையான தவத்தைக் கண்டு மனமிரங்கிய விநாயகப் பெருமான் அவன் முன்னே தோன்றினார். மூவுலகத்தாரும் என் ஆணைப்படி நடக்க வேண்டும். தவிர இரும்பு, வெள்ளி, தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்கள் எனக்கு வேண்டும் என வரம் கேட்டான் பலி. அப்படியே அருளினார் விநாயகர். மூன்று நகரங்களை விநாயகரிடமிருந்து பெற்றதால் பலி திரிபுரன் என்ற பெயரைப் பெற்றான். வரங்களை அருளிய விநாயகர் அவனுக்கு ஒரு நிபந்தனையை விதித்தார்.
அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் மூன்று நகரங்களோடு அவனும் சிவ பெருமானால், அழிக்கப்படுவான் என்பதே அந்த நிபந்தனை. வரங்களைப் பெற்றதும் திரிபுரனுக்கு அசுர குணம் எட்டிப் பார்த்தது. எனவே மூன்று உலகங்களையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கினான். எல்லோரும் வேதனை தாங்காமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனால், சிவபெருமான் அவனை அழித்தார். அவன் உடனே அவரது கால்களைப் பற்றினான். எனவே திரிபுரன் சிவபெருமானுடன் ஒன்றிப் போனான். ஆனைமுகன் அருள் இருந்ததாலேயே அவனுக்கு இந்த பாக்கியம் கிட்டியது.