மகாபாரதம் ஸ்கந்த புராணம், பத்ம புராணம் ஆகிய மூன்றிலும் இடம் பெற்றுள்ள கதை இது. ஒரு சமயம் இந்தப் புவியுலகத்தில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யவில்லை. உலகம் முழுவதையும் மெல்ல மெல்ல வறுமை பீடிக்கத் தொடங்கியது. மக்களும் கால்நடைகளும் மற்றப் பிராணிகளும் மரணம் அடையத் தொடங்கினார்கள். மகா தபஸ்விகளான சப்தரிஷிகளுக்கூடப் பசிப் பிணியின் கொடுமை தாங்காமல் இங்கும் அங்கும் அலையலாயினர். இவ்விதம் உணவைத் தேடிப் புறப்பட்ட சப்தரிஷிகள் விருஷாதர்பி என்ற அரசனின் நாட்டை அடைந்தார்கள். மகரிஷிகளின் வருகை பற்றிய செய்தியை அறிந்த விருஷாதர்பி தானே புறப்பட்டு அந்த முனிவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து அவர்களை வணங்கினான். அவர்களிடம், முனிவர்களே ! நான் உ<ங்களுக்கு உணவு, இருப்பிடம், நெய், பால் போன்றவற்றைத் தருகிறேன். தயவுசெய்து தாங்கள் அனைவரும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதும், அவனது வேண்டுகோளைக் கேட்ட ரிஷிகள் பின்வருமாறு கூறினார்கள்:
அரசே ! அரசனால் தானமாகத் தரப்படும் பொருள்கள் தேனைப் போல இனிமை கொண்டவையாகக் காணப்படும். ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் தீமை கொடிய விஷத்தைப் போலக் கொடுமையாக இருக்கும். இந்த உண்மையை அறிந்துள்ள நாங்கள் பேராசை வசப்பட்டுத் தாங்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்தணன் ஒரு நாளில் எவ்வளவு தவத்தைச் சேமிக்கிறனோ அது அனைத்துமே, நன்றாகக் காய்ந்த காடானது ஒரு சிறிய நெருப்புப் பொறிபட்டுக் கணப்பொழுதில் எரிந்து சாம்பலாவதைப் போல, அரசனிடம் பெறும் தானத்தால் கணநேரத்தில் அழிந்தே போய் விடுகிறது. ஆகவே தாங்களே இந்தப் பொருள்களை வைத்துக்கொண்டு சுகமாக வாழுங்கள். யாராவது இந்தப் பொருள்களை ஆசைப்பட்டுக் கேட்டாலோ, அல்லது இந்தப் பொருள்கள் யாருக்குத் தேவை படுகின்றனவோ அவர்களுக்குக் கொடுங்கள். எங்களுக்கு எதுவுமே வேண்டாம் என்று தெரிவித்தார்கள். இவ்விதம் சொல்லிவிட்டு ரிஷிகள் உணவைத்தேடி வேறு வழியாகக் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தார்கள். ரிஷிகள் சென்றவுடன் அரசன் தன் அந்தரங்க அமைச்சர்களுடன் கூடிக் கலந்து, தன் பணியாட்கள் மூலம் பொன் நிறைந்த அத்திப்பழங்களை ரிஷிகள் செல்லும் பாதையில் போடச் செய்தான். ரிஷிகள் அந்த வழியாக வந்தபோது அத்திப் பழங்கள் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டனர். அத்ரி மகரிஷி குனிந்து ஒரு பழத்தை எடுத்தார். அத்திப்பழத்தின் கனம் அவருக்கு விந்தையாக இருந்தது. உடனே அவர் மற்ற ரிஷிகளிடம், இந்த அத்திப்பழங்களுக்குள் பொன் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். நாம் இப்போது இவற்றை எடுத்துக்கொண்டால் மே<லுலகத்தில் இதன் பொருட்டுக் கெட்ட முடிவை மேற்கொள்ள நேரிடும் என்று கூறினார். கடுமையான நெறிமுறைகளுடன் வாழும் ரிஷிகள் அத்திப்பழங்கள் இருந்த பாதையை விட்டு விலகி வேறு வழியாகச் சமத்காரபுரியை நோக்கி நடந்தார்கள். வழியில் அவர்கள் தற்செயலாக, சுனஸ்சகர் என்ற பெயரை உடைய ஒரு துறவியைச் சந்தித்தனர். அவரைச் சந்தித்த இடத்தில் ஒரு பெரிய ஏரி காணப்பட்டது. அந்த ஏரியின் மேற்பரப்பு முழுவதும் மாதவச்செல்வியின் முகமே போல அழகிய தாமரை மலர்களால் நிறைந்திருந்தது. நீண்ட நேரம் அலைந்து திரிந்த களைப்புத் தீர, ரிஷிகள் அனைவரும் அந்த ஏரியின் கரையிலேயே உட்கார்ந்து விட்டனர். அப்போது சுனஸ்சகர் ரிஷிகளை நோக்கி, மகரிஷிகளே ! பசிப்பிணி தர்மம் எப்படிப்பட்டது என்பதைத் தாங்கள் அனைவரும் தயவுசெய்து எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு ரிஷிகள் சொல்ல ஆரம்பித்தார்கள்:
பசியால் வாடும் மனிதன் பயங்கரவாதியாகிறான். மரியாதை முறைகளையும் அவன் மறந்து விடுகிறான். எனவே உணவுதான் உலகிலேயே மிகவும் சிறந்த பொருள். ஆகவே அன்னதானம் செய்பவர்கள் அக்ஷய திருப்தி, சநாதனநிலை ஆகிய பெரும் பேறுகளை அடைகிறார்கள். சந்தனம், அகில், கோடைக் காலத்திலும் குளிர் காலத்திலு<ம் செய்யப்படும் விறகுதானம் ஆகியவை அனைத்துமே அன்னதானத்தின் முன்னால் நிற்கமாட்டாமல் தோற்றுப்போகும். தர்மம், தானம், தமம் ஆகிய இந்த மூன்றும்தான் முக்கியமான தர்மங்கள் ஆகும். இவற்றுள்ளுங்கூட, தமம் என்பது சிறப்பாக அந்தணர்களுக்கு உரிய சநாதன தர்மம் ஆகும். தமம் என்பது நம் தேஜஸை அதிகமாக்குகிறது. ஐம்பொறி அடக்கிய மனிதன் எங்கு வாழ்கிறானோ அவனுக்கு அந்த இடமே சிறந்த தவச்சாலையாக அமையும். விஷயப் பற்றற்ற மனிதனின் மனதிலுங்கூடக் குற்றங்கள் தோன்றக்கூடும். ஆனால் எவன் சதாகாலமும் நற்செயல்களைச் செய்வதிலேயே ஈடுபட்டிருக்கிறனோ அவனுக்கு அவன் வசிக்கும் வீடுகூடத் தபோவனம்தான். இலக்கணம் படித்துப் பெரிய பண்டிதன் ஆகி விடுவதனால் மட்டும் மோட்சம் கிட்டிவிடாது. தனிமையில் தொண்டு புரிந்து, யமம் நியமம் ஆகியவற்றை அனுசரித்துக் கொண்டு, தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதன் மட்டுமே மோட்சத்தை அடையமுடியும். வேத வேதாங்கங்களால் கூடப் புலனடக்கம் இல்லாதவனைத் தூய்மைப் படுத்திவிட முடியாது. தனக்கு எது கெடுதல் என்று படுகிறதோ அதைப் பிறருக்காகக்கூட, பிறர் விரும்பினாலுங்கூடச் செய்யக்கூடாது - இதுவே தர்மத்தின் சாரம் ஆகும். எவன் பிறன் மனைவியைத் தாய்க்குச் சமமாகவும், பிறர் பொருளை மண்ணுக்குச் சமமாகவும், உலகி<லுள்ள எல்லா உயிர்களிடமும் தன்னையே காண்கிறானோ அவனே சிறந்த ஞானியாக ஆகிறான்.
எல்லா உயிர்களிடமும் நல்ல எண்ணத்துடன் அவற்றின் நன்மையை மட்டும் விரும்புபவனே மோட்சத்தை அடைகிறான். அதன் பிறகு சப்தரிஷிகள் ஏரியில் இறங்கிச் சிறிது தாமரைத்தண்டுகளை எடுத்து வர விரும்பினார்கள். அந்த இடத்திலுங்கூட விருஷாதர்பி மன்னனுடைய பணிப்பெண்ணின் வடிவத்தில் அரக்கி ஒருத்தி காவல் இருந்தாள். அவர், சப்தரிஷிகள் விருஷாதர்பி அளித்த வெகுமதிகளை ஏற்றுக் கொள்ளததால் அதைத் தங்களையே அவமதித்ததாகக் கருதி, அந்த ரிஷிகளைக் கொல்வதற்காக அனுஷ்டானம் செய்து அனுப்பப்பட்டவள் ஆவாள். யாதுதானி எனப்பட்ட அந்த அரக்கி ரிஷிகளிடம், நான் இந்த ஏரியின் காவற்காரி. அதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னாள். அரக்கியின் குரலைக் கேட்ட ரிஷிகள் அவளிடம், பெண்ணே ! நாங்கள் பசியால் மிகவும் துன்பப்படுகிறோம். ஆகவே நீ அனுமதி கொடுத்தால் நாங்கள் இந்த நீர்நிலையிலிருந்து தாமரைத் தண்டுகளை எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். அதற்கு யாதுதானி, சரி, நீங்கள் அவ்விதமே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனை: அது என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவராக வந்து உங்களுடைய பெயரைச் சொல்லிவிட்ட பிறகுதான் இதற்குள் நுழையலாம் என்று கூறினாள். பெண்ணே ! பாவத்தினால் கொடுமை செய்பவர்களை ஆராத்ரி என்று சொல்கிறார்கள். பாவத்தினால் கெடுதல்கள் எதுவும் செய்யாமல் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்பவர்களை அத்ரி என்று அழைக்கிறார்கள். பாவத்தின் பிரமாண்ட உருவமாகிய இறப்பு என்பதிலிருந்து தப்பித்துக் கொண்டவன் என்பதனாலுங்கூட என்னை அத்ரி அழைக்கிறார்கள் என்றார் அத்ரி.
யாதுதானி அத்ரியிடம், தேஜஸ்வியான மகரிஷியே ! தாங்கள் எப்படி எத்தனை தடவை தங்கள் பெயரின் அர்த்தத்தைச் சொன்னாலும் எனக்கு அதன் பொருள் ஒன்றுமே எட்டாது. பரவாயில்லை. நீங்கள் இப்போது குளத்தில் இறங்கலாம் என்று சொன்னாள். வஸிஷ்டரும் இதுபோலவே அவனிடம் தமது பெயரைப் பற்றி, என்னுடைய பெயர் வஸிஷ்டர். எல்லோரிலும் சிறந்தவன் என்ற காரணத்தால் என்னை வரிஷ்டன் என்றும் சொல்லுகிறார்கள் என்று தெரிவித்தார். யாதுதானி அவரையும் உள்ளே போக அனுமதித்தாள். கச்யபர் கூறினார்- உடலுக்குக் கச்ய என்று பெயர். அந்த உடலை எவன் நன்கு பாதுகாக்கிறானோ அவனுக்குக் கச்யபன் என்பது பெயர். கு அதாவது பூமியில், வம் என்றால் மழை பொழியச் செய்வது. அத்தகைய வல்லமையுள்ள சூரியன்கூட என்னுடைய மறு உருவம்தான். அதனால் நான் குவம் என்றும் அழைக்கப் படுகிறேன். பூசனிப் பூவைப் போல ஒளி வீசிக்கொண்டிருப்பதனால் காச்யர் என்றும் என்னைத் தெரிந்துகொள் என்றார். இதுபோலவே சப்தரிஷிகள் எல்லோரும் தங்கள் பெயரின் பொருளைச் சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்கள். ஆனால் அந்த அரக்கியால் ஒருவருடைய பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. கடைசியில் சுனஸ்சகரின் முறை வந்தது. அவர், யாதுதானி ! இந்த மகரிஷிகள் தெரிவித்த முறையில் நான் என் பெயரைச் சொல்ல முடியாது. தர்மமூர்த்திகளாக விளங்கும் முனிவர்களின் தோழன் என்ற பொருளை உணர்த்தும் சுனஸ்சகன் என்பது என் பெயர் என்று தெரிவித்தார். இதைக் கேட்டதும் யாதுதானி அவரிடம், தாங்கள் தயவுசெய்து மீண்டும் ஒருமுறை உங்கள் பெயரைச் சொல்லங்களேன் என்று கேட்டாள். சுனஸ்சகர் அவளிடம், நான் என் பெயரை ஒரு தடவை சொல்லிவிட்டேன். நீ அதை மறந்து விட்டு மீண்டும் சொல்லும்படி கேட்கிறாயே ! என்னுடைய திரி தண்டத்தின் அடியால் எரிந்து சாம்பலாகுக என்று சொல்லிக்கொண்டே ரிஷியின் வேஷத்தில் வந்திருந்த தேவேந்திரன் வஜ்ராயுதத்தால் ஒரே அடியில் அவளைக் கொன்றுவிட்டார்.
அவளைக் கொன்று சப்தரிஷிகளைக் காப்பாற்றிய பின்பு அவர் அவர்களிடம், நான் சந்நியாசி அல்ல. நான் இந்திரன். உங்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் நான் துறவியின் வடிவத்தில் இங்கு வந்தேன். விருஷாதர்பியினால் அனுப்பப்பட்ட கொடூரமான அரக்கி இவள். உங்களைக் கொல்வதற்காகவே அந்த அரசனால் இவள் ஏவப்பட்டிருந்தாள். இவள் அக்கினி யிலிருந்து தோன்றியவள். ஆகவே இவளைக் கொல்வதற்காகத்தான் இங்கே வந்து அவளைக் கொன்று போட்டேன். தவ சிரேஷ்டர்களே ! ஆசையை அறவே ஒழித்துவிட்ட காரணத்தினால் நீங்கள் அனைவருமே அக்ஷய லோகத்திற்கு (அக்ஷய லோகம் என்பது எந்தப் பொருளை எத்தனை எடுத்தாலும் குறையாமல் இருக்கும் தன்மையை உடைய உலகம்) உரிமை உடையவர்கள் ஆகிறீர்கள். இப்போது நீங்கள் அனைவரும் இங்கிருந்து அக்ஷயலோகத்திற்குச் செல்லலாம் என்று தெரிவித்தார். முடிவில் சப்தரிஷிகள் இந்திரன் கூறியபடியே அவருடன் அக்ஷய லோகத்திற்குப் புறப்பட்டார்கள்.