பகவான் ராமகிருஷ்ணருக்கே குருவாக இருந்தவர் தோதாபுரி என்ற மிகப்பெரிய முனிவர். ஒரு நாள் தோதாபுரியும், ராமகிருஷ்ணரும் துனி எனப்படும் புனிதமான அக்னி குண்டத்தின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அன்றைய விவாதம் அத்வைதம் பற்றிப் போய்க் கொண்டிருந்தது. பேச்சின் வீச்சில் இருவரும் மெய்மறந்து இருந்தார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் அங்கே நிகழ்ந்தது. புதிதாகத் தோட்ட வேலைக்குச் சேர்ந்திருந்த ஒருவன் புகை பிடிப்பதற்காக நெருப்பைத் தேடிக் கொண்டு வந்தான். அவன் துனியைக் கண்டானா, துணியைக் கண்டானா? நேராய், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அக்னி குண்டத்தின் அருகே வந்தான். இரண்டு பேர் அங்கே பேசிக் கொண்டிருப்பதைக் கூட அவன் கவனிக்கவில்லை. தீ ஒன்றே மதி. துனியில் இருந்து தீத்துண்டு ஒன்றை எடுத்து, சுருட்டைப் பற்ற வைத்தான். ஆனந்தமாக புகையை வேறு வெளியில் விட்டான். கவனம் கலைந்து அவனைப் பார்த்தார் தோதாபுரி, அவ்வளவுதான். அவன் செய்த செயலைக் கண்டு, கொதித்துப் போனார், கடும் கோபத்துடன் அவனைத் திட்டித் தீர்த்தும் அவருக்கு அடங்கவில்லை. அருகில் இருந்த குச்சியை எடுத்து அவனை அடிக்க முயன்றார்.
ஆனால் அருகில் இருந்த ராமகிருஷ்ணர் மெல்லப் புன்னகைத்தார். தோதாபுரிக்கு மேலும் கோபம் கிளர்ந்தது. ராமகிருஷ்ணரைப் பார்த்து, ஏன் சிரிக்கிறாய், அந்த மடையன் செய்தது தப்பு என்று உனக்குத் தோன்றவில்லையா? என்றார். ராமகிருஷ்ணர் மீண்டும் புன்னகைத்தார், நான் உங்களையோ, அவனையோ பார்த்து சிரிக்கவில்லை. அவன் செய்தது சரியோ, தவறோ. ஆனால் நான் இப்போது உங்களின் பிரம்ம ஞானத்தின் அளவை, ஆழத்தைத் தெரிந்து கொண்டேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் பிரம்மத்தின் வெளிப்பாடே பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அத்வைதக் கருத்துகளை நீங்கள் என்னிடம் கூற, வாய் மூடுவதற்குள் எல்லாவற்றையும் மறந்து அவனை அடிக்கப் பாய்ந்து விட்டீர்களே. அந்த மாயையின் சக்தியை எண்ணித்தான் நான் சிரித்தேன் என்று கூறினார் பகவான் ராமகிருஷ்ணர். மெய் சிலிர்த்து நின்றார் குரு தோதாபுரி. நான் இனிமேல் ஒரு போதும் எதற்கும் கோபப்படமாட்டேன், அப்படியே வந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டேன் என்றும் சீடனுக்கு வாக்குக் கொடுத்தார். கோபத்தில் துர்வாசராக இருந்த அவர் அன்று முதல் சாந்தமாகவே காணப்பட்டார்.