ஒரு நல்ல விஷயம் நமக்குத் தெரிந்தால், அதை நான்கு பேருக்கு சொல்லி அவர்களையும் பயனடையச் செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு வேடிக்கை கதை. ஒரு பெண்ணுக்கு இரண்டு தன்னம்பிக்கை பாட்டுகளும், அவற்றின் பொருளும் தெரியும். ஆனால், அது தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். யாருக்கும் தெரிந்தால் அவர்களும் தன்னம்பிக்கை பெற்று முன்னேறி விடுவார்கள் எனக்கருதி யாருக்கும் சொல்லாமல் இருந்தாள். கட்டிய கணவனிடம் கூட அதைச் சொல்லியதில்லை. அவன் தன்னை விட புத்திசாலியாகி விடக்கூடாதே என்ற நல்லெண்ணமே இதற்குக் காரணம். அந்த பாடல்களும், பொருளும் அவளைப் பழிவாங்க எண்ணின. பாடல்கள் இரு செருப்புகளாக மாறி அவள் வீட்டு வாசலில் கிடந்தது. பொருள் ஆண்கள் அணியும் சட்டையாக மாறி அவள் வீட்டு நாற்காலியில் கிடந்தது. வெளியே சென்ற கணவன் வந்தான்.
செருப்பை பார்த்து யாரோ வந்துஇருக்கிறார் என யூகித்தான். உள்ளே கிடந்த ஆண் சட்டையைப் பார்த்து, யார் வந்தது? என மனைவியிடம் கேட்டான். யாரும் வரவில்லையே! என அவள் கையை விரிக்க, அவள் மீது சந்தேகப்பட்டு அடித்தான். வருத்தத்துடன் அருகிலுள்ள மண்டபத்துக்கு போய் படுத்தான். அப்போது அந்த மண்டபத்துக்கு ஒவ்வொரு வீட்டிலும் அணைக்கப் பட்ட தீபங்கள் வந்து சேர்ந்தன. கடைசியாக ஒரு தீபம் வந்தது. கடைசி தீபம் மற்றவைகளிடம், இதோ! படுத்திருக்கிறானே! இவன் தேவையில்லாமல் மனைவியை சந்தேகப்பட்டவன், என்று நடந்த கதையைச் சொன்னது. அவன் உண்மையை உணர்ந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டு, அந்தப் பாட்டையும், பொருளையும் கேட்டான். அவை அவளை விட்டு வெளியேறி செருப்பாகவும், சட்டையாகவும் மாறிவிட்டதால் அவளுக்கும் மறந்து விட்டது. புரிந்து கொண்டீர்களா! பயன்உள்ள விஷயங்களை உடனுக்குடன் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை!