உலகையே வென்ற மாவீரன் அலெக்சாண்டர். அவர் உலகை ஜெயித்தது வீரத்தால் மட்டுமல்ல! இன்னொரு ரகசியமும் புதைந்து கிடக்கிறது. உலகை வென்ற அலெக்சாண்டர் கிரேக்க நாட்டிற்குத் திரும்பினார். அவரை ஒரு பேரறிஞர் சந்தித்தார். மாவீரர் அலெக்சாண்டர் அவர்களே! உங்களுக்கு முன்பு இந்த தேசத்தை ஆண்ட அரசர்கள் பலர் உங்களை விட வலிமை வாய்ந்த படைகளுடன் இருந்திருக்கிறார்கள். சொல்லப் போனால், உங்களை விட பலமடங்கு பணமும் அவர்களிடம் கொட்டிக் கிடந்திருக்கிறது. ஆனால், அவர்களால் உலகை வென்று காட்ட முடியவில்லை. நீங்கள் அவர்களை விட வலிமை குறைந்தவராயினும் சாதனை படைக்கிறீர்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் எனக்குப் புரியவில்லை. அதை வெளிப்படுத்துவீர்களா? என்றான். அலெக்சாண்டர் மென்மையாக ஒரு புன்முறுவலை உதிர்த்தபின் பதிலளித்தார்.
அறிஞர் பெருமகனாரே! இதில் பரம ரகசியம் ஏதுமில்லை. எனக்கு இந்த வெற்றி கிடைக்க காரணமாக இருந்தவர் கடவுள் மட்டுமே! அவரது அருள் பரிபூரணமாக எனக்கு கிடைத்தது. நான் வென்ற நாடுகளில், ஏற்கனவே இருந்த ஆட்சிகள் ஓரளவுக்கே நல்லாட்சியை தந்தனர். மக்களின் எதிர்பார்ப்பு அந்த ஆட்சியாளர்களிடம் ஏராளமாக இருந்தது. அவற்றையெல்லாம் நான் சிறப்பாக நிறைவேற்றினேன். மக்கள் யார் ஆள்கிறார்கள் என்பது பார்ப்பதில்லை. தங்களைப் புரிந்து கொண்டு ஆட்சி நடத்துபவர்களையே விரும்புகிறார்கள். அவ்வகையில், முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பான ஆட்சியையும், நிறைந்த வசதிகளையும் செய்து கொடுத்தேன். அந்த நாட்டு ஆட்சியாளர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக, அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் நான் நடக்கவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை அளித்தேன். இதுவே நான் வெற்றிப்படிக்கட்டில் கால் வைத்த ரகசியம், என்றார், உலகெங்கும் நல்லாட்சி மலரட்டும். நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மனநிலை மக்களிடம் வளரட்டும். எல்லாவற்றிற்கும் அலெக்சாண்டர் சொன்னது போல், ஆண்டவனின் அனுக்கிரகம் கிடைக்கட்டும்.