சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதியாரை கைது செய்ய ஆங்கில ஆட்சி வாரண்ட் பிறப்பித்திருந்தது. பாரதியார் ஊரிலேயே பாதுகாப்பாக இருந்தார். அப்போது, அவரது நண்பர் ஒருவர் அவரைச் சந்தித்தார். பாரதி! சந்தோஷமான செய்தி உமக்குத் தெரியுமா? என்றார். என்ன? உம் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டு விட்டது. இனி, நீர் சுதந்திரமாக இருக்கலாம். நான் சென்னைக்குப்போகிறேன். நீரும் என்னுடன் வரலாம்,.பாரதி கிளம்பிவிட்டார். வழக்கமாக, மனைவி செல்லம்மாவிடம் சொல்லிவிட்டு போகிறவர், அன்று சொல்லாமல் கிளம்பி விட்டார். கணவரைக் காணாமல் செல்லம்மா தவித்தார். இரவாகி விட்டது. அப்போது, ஒரு கார் அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றது. பாரதியும், வக்கீல் ஒருவரும் இறங்கினர்.
வக்கீல் செல்லம்மாவிடம், அம்மா! கதையைக் கேட்டீர்களா! காலையில், பாரதியின் நண்பன் அவரை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தான். நான் வழியில் அவர்களைப் பார்த்தேன். தன் மீது வாரண்ட் ரத்து செய்யப்பட்டதால், சென்னை செல்வதாகக் கூறினார். நான் அதிர்ந்து போனேன். வாரண்ட் ரத்தாகவில்லையே! யார் சொன்னது? என்றேன். பாரதி, அந்த நண்பனை நோக்கி கையை நீட்டினார். உம்மை, அவன் நன்றாக ஏமாற்றிவிட்டான். நீர் சென்னை சென்றால் சிறைக்குத் தான் போவீர், வாரண்ட் அமலில் தான் இருக்கிறது என்று சொல்லி அழைத்து வந்தேன், என்று நடந்த கதையை மூச்சு விடாமல் சொன்னார். மறுநாள், அந்த நண்பர் வந்தார். செல்லம்மா அவரைக் கோபத்துடன் பார்த்தார். அவரைக் கையமர்த்திய பாரதி, புகை நடுவினில் தீ இருப்பதைக் புவியினில் கண்டோம்! பகைவனுக்குஅருள்வாய் நெஞ்சே! என்று பாடினார். அந்த நண்பர் தடாலென பாரதியின் காலில் விழுந்து கண்ணீர் வடித்தார். நண்பர்களுக்குள் துரோக சிந்தனை இருக்கவே கூடாது. நண்பர்கள் தங்கள் இலவம்பஞ்சு நெஞ்சங்களை துரோகம் என்னும் ஊசி கொண்டு தைக்கக்கூடாது. கண்ணீர் வழியும்படி செய்யக்கூடாது. சரிதானே!