இப்போதெல்லாம், பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்ப்பதென்பது பகீரதப்பிரயத்தனமாக இருக்கிறது. பெற்றவர்கள் சுவாமியிடம், ஐயனே! உன்னை நம்பி தான் மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்குகிறேன், என்று ஆத்மார்த்தமாக பிரார்த்தித்த பிறகே இறங்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய கஷ்டம் தான்! ஒரு கதையைக் கேளுங்க! ஒரு அப்பா, மகளுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்தார். கடைசியாக, அந்த ஊரிலேயே புத்திசாலி என புகழப்பட்ட ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தார். இருந்தாலும், அவன் புத்திசாலி என்பதை தானும் தெரிந்து கொள்ள தனது ஊருக்கு வரவழைத்து, பத்து பெரிய மனுஷங்க முன்னாலே பேசும்படி கூறினார். பெரியோர்களே! நான் சொல்லப்போறது என்னான்னு உங்களுக்கு தெரியுமா? என்று ஆரம்பித்து சற்று நிறுத்தினான். பெரியவர்கள் எல்லாம் தெரியாது, தெரியாது என்று கூச்சலிட்டனர். அப்போ! தெரியாதவங்ககிட்டே பேசி பலனில்லே என்று பேச்சை முடித்து விட்டான். பெண்ணைப்பெற்றவர், பெரியவர்களிடம், என்னைய்யா நீங்க! அவன் அப்படி கேட்டால் தெரியும்னு சொல்லியிருக்க வேண்டியது தானே! என்றார்.
அடுத்தநாளும் மாப்பிள்ளையை பேசச் சொன்னார்கள். பெரியோர்களே! நான் இப்போ பேசப்போறது என்னன்னு தெரியுமா? என்று தன் வழக்கமான பாணியில் அவன் ஆரம்பிக்க, தெரியும் தெரியும் என்றார்கள் பெரியவர்கள். எல்லாம் தெரிஞ்ச உங்ககிட்டே நான் பேசுறது வீண்தானே! என்று முடித்து விட்டான் மாப்பிள்ளை. பெண்ணைப் பெற்றவருக்கு ஏக குழப்பமாகி விட்டது. பெரியவர்களிடம்,பாதி பேர் தெரியாதுன்னும், பாதிபேர் தெரியுமுன்னும் சொல்லுங்க. மாப்பிள்ளையோட புத்திசாலித்தனம் தெரிஞ்சிடும், என்று ஐடியா கொடுத்தார். மறுநாளும் மாப்பிள்ளை வழக்கம் போல் ஆரம்பிக்க, சிலர் தெரியுமென்றும், சிலர் தெரியாதென்றும் சொன்னார்கள். அப்போ வசதியா போச்சு! தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு சொல்லுங்க! தெரியாதவங்க தெரிஞ்சவங்ககிட்டே கேட்டுக்கங்க! என்று முடித்து விட்டு விடுவிடுவென போய்விட்டான். இவனை மாதிரி, அதிகம் படித்த மேதாவிகள் போலும், பெரிய்ய்ய வேலையில் இருப்பதாக சொல்லிக் கொண்டும் ஏமாற்ற வருபவர்கள் ஏராளம். கவனமாக இருங்கள் பெற்றோரே!