துறவி ஒருவர் ஒரு தேசத்துக்கு வந்தார். அந்த நாட்டில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், துறவிகளை மட்டும் தடுக்கக் கூடாது என்பது அரசகட்டளை. எனவே, பாதுகாப்பு படையினர் துறவியைக் கண்டுகொள்ளவில்லை. அவர் சங்கடம் ஏதுமில்லாமல் அரண்மனைக்கு வந்துவிட்டார். அரசன் அவரது காலில் விழுந்து வரவேற்றான். தங்கள் திருவடிகள் எங்கள் தேசத்தில் பட நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று முகமன் கூறினான். அவனது உபசரிப்பில் மகிழ்ந்த துறவி, மன்னா! எதற்காக உன் நாட்டில் இவ்வளவு பாதுகாப்பு போட்டிருக்கிறாய்? என்றார். துறவியாரே! எங்கள் தேசத்தில் விலை உயர்ந்த வைரக்கல் ஒன்று இருக்கிறது. அதை வேற்றுநாட்டவர் பலர் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதைப் பாதுகாக்கவே இவ்வளவு ஏற்பாடு!.
அதையேன் பாதுகாக்க வேண்டும்! அதை எந்த நாடு மிக அதிக பொருள் கொடுத்து வாங்குகிறதோ, அந்த நாட்டுக்கு விற்றுவிட்டு பொருளைக் கொண்டு மக்கள் நலப்பணிகள் செய்யலாம் அல்லவா! பல தொழில்கள் துவங்கலாம். அது பெரும் லாபத்தை தரும் அல்லவா! மேலும், பாதுகாப்புச்செலவு பல கோடிகளையும் மிச்சப்படுத்தலாமே! துறவியாரே! அப்படியானால், எங்கள் நாட்டைப் பற்றிய பெருமை என்னாவது!. சரி..சரி..! உன் நாட்டில் இதை விட உயர்ந்த கல் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்க வருகிறாயா! அது இருக்குமிடம் எனக்குத் தெரியும்! நான் காட்டுகிறேன்! அரசன் சிரித்தான். என்ன! எனக்குத் தெரியாமல் என் நாட்டில் இன்னொரு கல்லா! ஆச்சரியமாயிருக்கிறது! சரி... வாருங்கள். தாங்கள் சொல்வது சரியாக இருந்தால் எங்கள் நாடு மேலும் பெருமைப்படப் போகிறது!.
பரிவாரங்கள் புடைசூழ அரசன் துறவியுடன் கிளம்பினான். துறவி அவனை ஒரு குடிசைக்குள் அழைத்துச் சென்றார். ஒரு பெண் அவர்களை வரவேற்றாள். அதே நேரம் மன்னர் திடீரென தன் குடிசைக்கு வந்திருப்பதால் அவளுக்குப் பயம். அவள் ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டிக்கொண்டிருந்தாள். மன்னா! நீ வைத்துள்ள கல் ஒரே இடத்தில் முடங்கி பல கோடிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த எளிய கல்லில் மாவரைக்கும் இவள், பலருக்கும் விற்று தன் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். இப்போது சொல்! எந்தக் கல் உயர்ந்தது? என்றார். மன்னன் தலை குனிந்தான். மறுநாளே, வைரக்கல்லை ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டான். ஒரு பொருளை முடக்கி வைப்பதை விட, அதன் மூலம் நற்பணிகள் செய்வது தான் சிறப்பு தெரிகிறதா!