சிலர் திருத்தமாகப் பேச முடியாமல் சிரமப்படுவர். அப்படிப்பட்ட இளைஞன் ஒருவன் மந்திர தீட்சை பெறுவதற்காக வித்வான் ஒருவரை அணுகினான். ஒரு வித்வான் எளிய மந்திரமான "ஸ்ரீகிருஷ்ணாய நம: என்று ஜெபித்து அவனை சொல்லச் சொன்னார். அவன் இருகைகளையும் குவித்தபடி, "ஸ்ரீ திருஷ்ணாயநம: என்று தவறாகச் சொன்னான். மீண்டும் மீண்டும் சொன்ன போதும் சரியான உச்சரிப்பு வரவில்லை. ""உனக்குச் சொல்லித் தர நான் ஆள் இல்லையப்பா. இங்கிருந்து கிளம்பிவிடு, என்று கோபத்தில் கத்தினார் வித்வான். அந்நேரத்தில் வித்வானின் நண்பர் ஒருவர் அங்கு வந்தார். அமைதியுடன் அந்த நண்பர் வித்வானிடம்,""ஏன் கத்துகிறீர்! அவன் அப்படி சொன்னதில் ஒன்றும் தவறில்லை. "ஸ்ரீ திருஷ்ணாய நம: என்பதும் அந்த பகவானையே குறிக்கும்.
"ஸ்ரீ என்றால் லட்சுமி,"திருஷ்ணா என்றால் "அன்பு கொண்டவன் என்பது பொருள். திருமகளிடம் அன்புகொண்டவனும் பகவான் கிருஷ்ணன் தானே! என்று விளக்கமளித்தார். அதைக் கேட்ட இளைஞன் சந்தோஷமடைந்தான். அவனுக்கு கிருஷ்ணர் மீது மேலும் பக்தி உண்டானது. இரவும் பகலும் ஜெபித்து சிறந்த பக்தராக மாறினான். இந்த கதையின் மூலம் இறைவனின் நாமத்தை தவறாகச் சொன்னாலும் பரவாயில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. இயலாமை, அறியாமை போன்ற காரணத்தால் இறை நாமத்தைத் தவறாகச்சொன்னாலும், அந்த மந்திரத்திற்குள் பக்தி புதைந்து கிடந்தால் கடவுள் ஏற்றுக் கொண்டு அருள்புரிவார் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.