வயதான பெற்றோருக்கு நான் ஒரே மகள். வெங்கடேசப் பெருமாளை வேண்டிப்பிறந்தவள் என்பதால்"அலமேலு என்று பெயரிட்டனர். ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்ஸவத்திற்கு ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்று விடுவோம். என் பதினைந்து வயதில் அப்பா காலமான பின், திருப்பதி செல்ல முடியாமல் போனது. வீட்டிலேயே அம்மா புரட்டாசி விரதம் இருந்தார். எனக்கு திருமண வயது வந்ததும், மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். நல்ல வரன் ஏதும் அமையவில்லை. ஒருநாள் அம்மா, ""ஏழுமலையப்பா! அலமேலுவின் கல்யாணம் உன் அருளால சீக்கிரமே நடக்கணும்! தங்க மோதிரத்தை உனக்கு காணிக்கையா செலுத்துறேன், என்று வேண்டிக் கொண்டார். அந்த வருஷத்திலேயே மலேசியாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை எனக்கு அமைந்தது. ஜாம் ஜாமென்று கல்யாணமும் நடந்தது.
நான் ஒரே மகள் என்பதால், அம்மாவும் மலேசியா வந்து விட்டார். அங்கு சென்ற கொஞ்ச நாளில் அம்மா உடல்நலமில்லாமல் காலமானார். அதன் பின் திருப்பதி வேண்டுதல் எனக்கு மறந்தே போனது. இரு பெண் குழந்தைகளுக்கு தாயானேன். காலம் வேகமாக ஓடியது. மூத்தவளுக்கு உறவினர்மூலம் தமிழ்நாட்டில் மாப்பிள்ளை தேடினோம். வசதியான இடம் சீக்கிரமே அமைந்தது. மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்தை திருப்பதியில் நடத்த விரும்பினர். நாங்களும் சம்மதித்தோம். கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தன. ஒரு மாதம் தான் இருந்தது. ஆனால் திடீரென, ""பெண் ஜாதகம் சரியாகப் பொருந்தவில்லை. எங்களுக்கு சம்மதம் இல்லை, என மாப்பிள்ளை வீட்டாரின் அதிர்ச்சி தகவல் எங்களுக்குக் கிடைத்தது. சம்பந்தத்தை அறிமுகப் படுத்திய உறவினர் மூலம், இரு குடும்பமும் சேர்ந்து ஒரே ஜோசியரிடம் ஜாதகம் பார்க்க முடிவெடுத்தோம். திருப்பதி போனதாகச் சொல்லி அந்த ஜோதிடர் லட்டு பிரசாதம் கொடுத்தார். அதைவாங்கியதும் பயம் அறவே போனது. ஜோதிடரும் கொஞ்ச நேரத்தில் இரு ஜாதகங்களையும் பார்த்து, ""பொருத்தம் இல்லைன்னு யார் சொன்னது? இதை தாராளமாச் சேர்க்கலாம், என்று முடித்தார்.
கல்யாணம் திருப்பதியில் நடந்தது. நீண்டகாலத்திற்குப் பின் திருப்பதி வந்திருப்பதை எண்ணி மகிழ்ந்தேன். புதுமணத் தம்பதியோடு காத்திருந்தோம். கோவிந்த நாமத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டே நின்றேன். பெருமாளைக் கண்டதும், ""ஏழு மலையானே! உன் அருளால் கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது. கோடி நமஸ்காரம்! என்று வணங்கினேன். அதன் பின் காணிக்கை செலுத்த ஆயத்தமானோம். காணிக்கைப் பையில் இருந்த காசுகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். என் கணவரும் வேகமாகக் காசுகளை எடுத்துப் போட்டார். அப்போது, அவர் கையில் இருந்த மோதிரம் உள்ளே விழுந்து விட்டது. ""ஆ! யாரோ மோதிரத்தை இழுப்பது போல இருக்குதே! என்றார் பரபரப்புடன். ""அலமேலு! இது நம்ம கல்யாணத்துக்கு உன் அம்மா கொடுத்த மோதிரம்! இப்படி எதிர்பாராம உண்டியலில் போயிட்டுதே!, என்றார். அதைக் கேட்டதும் அம்மா எனக்காக வைத்த வேண்டுதல் சட்டென ஞாபகம் வந்தது. ""ஏங்க! மோதிரக் காணிக்கையையும் மறக்காம பெருமாள் வாங்கிட்டாரே! என்றேன் ஆச்சர்யத்துடன். புரியாமல் விழித்த கணவரிடம் விஷயத்தைச் சொன்னேன் விலாவாரியாக. ஏழுமலையான் மகிமையை என்னவென்று சொல்வது!