ஒரு காட்டிற்குள் இரண்டு சிறுவர்கள் சென்றார்கள். அங்குமிங்கும் ஓடிப் பிடித்து விளையாடியபடியே சென்றதால் தங்களையறியாமலே நடுக்காட்டுக்குச் சென்று விட்டார்கள். ஊருக்குள் திரும்பிச் செல்ல வேண்டிய வழி தெரியவில்லை. அடர்ந்த காடு. புலி உறுமும் சத்தம் ! பதறிப் போனார்கள். புலி! கிலி! என்ன செய்வது? ஏது செய்வது? இருவரும் கடவுள் பக்தி மிகுந்த பசங்கள். முதல் சிறுவன் சொன்னான். நாம் கவலைப் பட வேண்டாம். கடவுளிடம் நம்மை ஒப்படைத்துவிடுவோம். நம்மை அவர் காப்பாற்றுவார். என்றான். அடுத்தவன், வேண்டாமடா, எதற்கெடுத்தாலும் கடவுளை அழைக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்து. அவரை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? அவர் நம்மை உருவாக்கி, நமக்கு அறிவையும், திறனையும் கொடுத்துள்ளார். அதை நாம் உபயோகப்படுத்துவோம். புலியின் உறுமல், பலமாகக் கேட்க ஆரம்பித்தது.
ஹேய், புலி நமக்கு ரொம்பப் பக்கத்தில் வந்துவிட்டது. இதோ இந்த உயர்ந்த மரத்தில் ஏறி, உச்சிக்குச் சென்றுவிடுவோம். புலியால் அவ்வளவு உயரமெல்லாம் ஏறி வர முடியாது. ஆமாம். சீக்கிரம் சீக்கிரம்! அவசரமாக இருவரும் மரம் ஏறினார்கள். புலி மெதுவாக அங்கே வந்தது. அண்ணாந்து பார்த்தது. அந்த நீண்ட மரத்தில் ஏற முயற்சி செய்தது. வழுக்கி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் ஓடிப் போனது. உச்சியில் நின்றிருந்த சிறுவன் ஒருவன் சொன்னான். ஹேய், அதோ பார், நம் ஊர் தொலைவில் தெரிகிறது ! பார் ! நாம் எதிர்ப்பக்கத்தில் முட்டாள்தனமாகச் சென்று கொண்டிருக்கிறோம். அதுதான் சரியான பாதை. அப்படியே சென்றால் இருட்டுவதற்குள் வீட்டுக்குப் போய்விடலாம்.
அதுபோலவே இரண்டு சிறுவர்களும் மரத்தைவிட்டு இறங்கி, சுலபமான வழியில் சிரமம் இல்லாமல் தங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். நீங்கள் யார் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறீர்களோ, யாரை அதிகம் நம்புகிறீர்களோ அவர்களுக்குக் கஷ்டம் தரக்கூடாது. அது பெற்றோராக இருந்தாலும் சரி, நண்பராக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி ! ஆமாம். உங்களைப் படைத்த கடவுள், எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதைச் சரியாகச் செயல்படுத்துங்கள். சும்மா அவரைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்காதீர்கள் !