கோசல தேசத்தில் தேவதத்தன் என்னும் ஒரு அந்தணன் வாழ்ந்து வந்தான். புத்திர வரம் வேண்டி அவன் புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினான். அதில் கோபிலர் என்ற ரிஷி உத்காதாவாக இருந்து ரதந்தர என்ற சாமத்தை ச்வரிதத்துடன் கானம் பண்ணும் பொழுது தன்னுடைய மூச்சை அடிக்கடி அடக்கி விட்டு விட்டு ஸ்வர பங்கமாக செய்து வந்தார். இதைக் கண்டு கோபமடைந்த தேவதத்தன், இது என்ன மூடத்தனம்? என்றான். கோபிலரும் கோபமடைந்தார். பதிலுக்கு, உனக்குப் பிறக்கப் போகும் புத்திரன் ஊமையாகவும், மூடனாகவும், முரடனாகவும் பிறக்கக் கடவன் என்று சாபமிட்டார். மனம் வருந்திய தேவதத்தன் அவரிடம் மன்னிப்புக் கேட்டு சாபநிவிருத்தி வேண்டினான். மனமிறங்கிய கோபிலர், உன் புத்திரன் மூடனாக முதலில் இருந்து பின்னால் நல்ல வித்துவான் ஆவான் என்றார்.
தேவதத்தனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அவர் உதத்தியன் என்று பெயர் இட்டார். அவன் ஊமையாகவும் எதுவும் தெரியாத மூடனாகவும் இருந்தான். அவனுடைய மூடத்தனத்தைக் கண்ட அனைவரும் அவனை எள்ளி நகையாடினர். ஏளனமாக கேலி பேசி, அவனை மன வருத்தம் அடையச் செய்தனர். காலக்கிரமத்தில் இந்த கேலியையும் நையாண்டியையும் பொறுக்க முடியாத உதத்தியன் வீட்டைத் துறந்து வனம் நோக்கிப் புறப்பட்டான். அங்கு, தேவியை தியானம் செய்ய நினைத்தவனுக்கு எந்த விதமான மந்திரமும் சொல்லத் தெரியவில்லை. சத்தியமே தவம் என்பதை மனதில் இருத்தி சத்தியம் சொல்வதையே தன் வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டான். காலப் போக்கில் இவனது உண்மை பேசும் விரதத்தை அறிந்த அனைவரும் இவனுக்கு ஸத்ய விரதன் என்ற பெயரை இட்டனர். இப்படி பதினான்கு வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் ஒரு பன்றியை வேடன் ஒருவன் அம்புகளால் அடிக்க அது, அலறியவாறே உருண்டு புரண்டு ஸத்ய விரதனை நோக்கி ஓடி வந்தது. பெரும் ரத்த வெள்ளம் பெருக ஓடி வந்த பன்றியைக் கண்ட ஸத்யவிரதன் ஊமையானபடியால் ஹ்ரு ஹ்ரு என்ற தொனியோடு பயந்து கூச்சலிடத் தொடங்கினான்.
வித்யா மந்திர சம்பந்தமாகிய பீஜாக்ஷர உச்சரிப்பை அவன் உச்சரித்தவுடன் தேவி மனம் கனிந்தாள். ஸத்ய விரதன் மீது தன் அருள் பார்வையை செலுத்தினாள். மூடனாக இருந்த ஸத்ய விரதனுக்கோ தான் கூறிய ஹ்ரு, ஹ்ரு என்ற சப்தம் வித்யா மந்திர சம்பந்தமுடைய பீஜாக்ஷர உச்சரிப்பு என்பது தெரியாது. அவன் உருண்டு புரண்டு கிடந்த பன்றி மாயமாக வேறு திசையில் ஓடியதைக் கண்டு பயந்து நடுநடுங்கிக் கொண்டிருந்தான். அப்போது பன்றியின் உருமல் சப்தம் கேட்ட திசை நோக்கி வந்த வேடன், என்றும் உண்மையே பேசும் ஸத்ய விரதன் அங்கிருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். பன்றி இருக்குமிடத்தை பொய்யின்றி உரைக்கவல்லவர் அவரே என்பதால் அவரை நோக்கி, ஸத்ய விரதரே! பன்றியைக் கண்டீரா? என்று கேட்டான். ஒரு உயிரைக் காக்கும் பொறுப்பு தன் மீது விழுந்திருக்கிறதே என்று யோசித்த அவன் வாக்கிலிருந்து கவிதை அருவியென வெளி வந்தது. ஊமை மிகச் சிறந்த கவித்துவம் உள்ள வித்வானாக மாறி விட்டான்.
அருள் மழை விளைவித்த அபூர்வ ஸ்லோகம்
யா பஸ்யதி நஸாப்ருதே யாப்ருதே ஸா ந பஸ்யதி !
அஹோ வ்யாத ஸ்வகார்யாத்தின் கிம ப்ருச்சஸி புந:
என்று அவன் வேடனிடம் கூறினான்.
பிறர் உயிரை வதைத்துப் பிழைக்கும் கொடியவனே ! ஒரு பொருளைப் பார்க்கும் போது பேசாது. பேசும் போது பார்க்காது. பேசும் கருவி வேறு. பார்க்கும் கருவி வேறு. (பார்க்கும் கண்களுக்கு நாக்கு இல்லை. ஆகவே அது பேசாது. பேசும் நாக்கிற்கு கண்கள் இல்லை. ஆகவே அது பார்க்காது!) உலகில் உள்ள அனைத்துப் பொருளும் அன்னையின் உயிராக இலங்குகிறது. அன்னையின் வடிவைக் காணும் போது வேறு ஒரு பொருளைப் பிரித்துப் பேச முடியாது. வேறு பொருளாகக் காணும்போது எங்கும் நிறைந்த சக்தியின் வடிவைக் காண முடியாது. வேடனே ! மூடனே ! அகக் கண்ணால் பார்த்த பொருள் வேறு ! புறக் கண்ணால் புலனாகக் கூடிய நீ கேட்கும் பொருள் வேறு! உனக்கு உரைக்க இயலாது. உன்னால் அதை அறிய முடியாது என்று இப்படி அபூர்வமான வார்த்தைகளை அவன் வேடனிடம் சொல்ல, ஒன்றும் புரியாத வேடன் அங்கிருந்து அகன்றான். ஸத்யவிரதனின் சிந்தனை வெள்ளம் அம்பிகையின் அருள் மழையை எண்ணி எண்ணி கவிதையைப் பொழியத் தொடங்கியது. பார்த்தவர் கேட்டவர் அனைவரும் வியந்தனர். ஒரே ஒரு பீஜ மந்திரத்தை பொருள் அறியாமல் சொன்ன ஸத்யவிரதனுக்கு அம்பிகை புரிந்த அருள் இது.