ஊருக்கு உபதேசம் செய்யும் பலர், தங்கள் விஷயத்தில் அதைக் கடைப்பிடிக்கிறார்களா என்றால் இல்லை. அவங்களுக்கு ரொம்ப ஆசை, அதனால் தான் ஆட்சியில் அமர்ந்து மோசடி செய்றாங்க! என்று கட்சியினரையும், அதிகாரிகளையும் விமர்சிக்கும் பொதுஜனங்களில் சிலரும் கூட மோசடியில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். ரேஷன் கடையில் தங்களுக்குரிய ஒதுக்கீடு போக, கூடுதலாக பொருள் வாங்குவது கூட, குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆசையால் தான்! ஒரு பெரியவர் குற்றால மலையில் ஏறி, பொங்குமாங்கடலையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே வந்த இளைஞன்,அங்கே என்ன பார்க்கிறீங்க! உள்ளே விழுந்தா என்னாகும் தெரியுமா! வாங்க, கீழே போகலாம். அருவியிலே குளிச்சிட்டு ஊரைப் பார்த்து போங்க, என்றான் கரிசனையுடனும் கண்டிப்புடனும்.
நான் உள்ளே விழுந்து உயிரை விடணும் தானே எட்டிப் பார்த்துட்டே இருக்கேன், என்றவரிடம், இந்த வயசுலே வாழ்க்கையிலே அப்படி என்ன வெறுப்பு? என்றான் இளைஞன். இந்த ஊரும் புடிக்கலே, உலகமும் புடிக்கலே, ஆசை புடிச்ச உலகம். இதை விட்டு போகணும், என்றவரின் அருகில், ஒரு பை இருந்ததைப் பார்த்தான் இளைஞன். சரி...பைக்குள்ளே என்ன வச்சிருக்கீங்க! என்றான். கொஞ்சம் சாதம் இருக்கு! உள்ளே விழறதுக்கு முன்னாடி பசிச்சா சாப்பிடத்தான், என்றார் பெரியவர். இளைஞன் சிரித்தபடியே,சாகப்போகிற நிலையிலும் சாப்பாடு மேலே ஆசையை விடாத நீங்க, இந்த உலகத்திலே வாழ நினைக்கிறவங்க ஆசைப்படுறதைப் பத்தி கோபிக்கிறதுலே என்ன அர்த்தம் இருக்கு! ஊரை திருத்த கீழே குற்றாலநாதர் இருக்காரு. அவரு பாத்துக்கிடுவாரு. நீங்க கிளம்புங்க, என்றான். ஆசை காரணமாக சட்டத்துக்குப் புறம்பாக நடப்பவர்களைத் தண்டிப்பது ஆண்டவனின் வேலை. அவன் நினைத்தால் ஒரு பூகம்பம்! ஊரையே காலி செய்து விடுவான். ஒருவன் தன் அளவில் ஒழுக்கமாக இருந்தால், ஊரே திருந்தி விடும். சரி தானே!