பயம் தான் அனைத்துக் குற்றங்களுக்கும் ஆணி வேராகிறது. பயத்தில் தான் பொய் சொல்லும் வழக்கம் உருவாகிறது. ஒரு மன்னர் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தார். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு புத்திமான் என்ற பட்டமும், பத்தாயிரம் பொற்காசு பரிசு என்றும் அறிவித்தார். போட்டி இதுதான். மன்னர் மக்களுக்கு சில ஆடுகளை வழங்குவாõர். எல்லா ஆடுகளையும் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். மறுவருடம் ஆடுகளை அரண்மனையில் ஒப்படைக்கும் போது, எடை கூடவோ, குறைந்திருக்கவோ கூடாது. இதுதான் போட்டி. மக்களும் ஆர்வமாக போட்டியில் பங்கேற்றனர். அடுத்த ஆண்டில் ஆடுகள் எடை போடப்பட்டன.
எல்லா ஆடுகளும் ஏதோ ஒரு வகையில் பெருத்தோ, எடை குறைந்தோ இருந்தன. கடைசியாக ஒரு இளைஞன் தனது ஆடுடன் வந்தான். அதை எடை போட்டால் இம்மியளவு பிசகாமல் அப்படியே இருந்தது. எப்படி ஆட்டின் எடையை சரியான அளவில் வைத்திருந்தாய்? என்றார் மன்னர். இதை தினமும் காட்டுக்கு கொண்டு செல்வேன். அங்கிருந்த வேடர்களிடம், ஒரு புலியைப் பிடித்து கூட்டில் அடைக்கும்படியும், அதன் முன்னால் இந்த ஆட்டைக் கட்டி வைத்து புல் போடும்படியும் செய்வேன். ஆடு சாப்பிட்டாலும், புலி பயத்தில் கிலி பிடித்து எடை கூடவே இல்லை, என்றான். ஆக, பயமுள்ளவன் தன் வாழ்க்கையில் முன்னேறவே மாட்டான். பயத்தை அறவே விடுவோமா!