ஒரு ஊரில் சாமியார் ஒருவர் இருந்தார். ஊர் மக்களிடம்,பொய் சொல்லாதீர், திருடாதீர், ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள், ஜாதிபேதம் கூடவே கூடாது, என்றெல்லாம் அறிவுரை வழங்குவார். மக்களும் அதை ஏற்று அமைதியாக இருந்தனர். இது பக்கத்து ஊரில் இருந்த ஒரு இளைஞனுக்கு வெறுப்பைத் தந்தது. நம்ம ஊரெல்லாம் கெட்டுக்கிடக்க, இந்த ஊர் மட்டும் இவ்வளவு அமைதியாய் இருக்கிறதே! இதைக்கெடுக்க
வேண்டுமானால், சாமியாரின் இமேஜைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் போட்டான். அந்த கிராமத்துக்கு வந்தான். மக்களே! உங்க ஊருக்கு வந்துள்ள சாமியார் ஏதேதோ சொல்லி, உங்க மனசை மாற்றி, சோம்பேறியாக்க பார்க்கிறார். உங்க தைரியத்தை குறைக்கிறார்.
என்னைப் பாருங்கள்! நான் இவரை விட பலசாலி. என்னால் தண்ணீரில் கூட நடக்க முடியும். அப்படி நடந்து காட்டினால், நான் சொல்வதை இனி கேட்பீர்களா? என்றான். ஊர் மக்களும் சரியென்று தலையாட்டினர். எல்லாரும் ஆற்றங்கரைக்கு சென்றனர். வாலிபன், தன் உடலில் நீரில் மூழ்காமல் இருப்பதற்குரிய ஆடைகளை அணிந்து தண்ணீரில் நடந்து அக்கரைக்கு போனான். மீண்டும் நடந்து வந்து சேர்ந்தான். ஊரே அவனைப் பாராட்டியது. சாமியாரே! உங்களால் அறிவுரை தான் சொல்ல முடிகிறது.
இவனோ தண்ணீரிலேயே நடக்கிறான். இவனால், நினைத்ததை யெல்லாம் எங்களுக்கு தர முடியுமே, என்றனர். அடப்பாவிகளே! இதென்ன பிரமாதம்! இவன் செய்த வேலை ஒரு ரூபாய்க்கு தான் சமம். இவன், ஒரு ரூபாய் மட்டும் கொடுத்து, இங்கிருந்து ஓடத்தில் சென்றிருந்தால், உடைகூட நனையாமல் அக்கரைக்கு போயிருக்கலாம், என்றார். அத்துடன், தண்ணீரில் நடக்க, அவன் பயன்படுத்திய ஆடையை இன்னொருவனை அணிந்து கொள்ளச் சொல்லி நடக்கச் சொன்னார். அவனும் ஹாயாக நடந்து சென்றான். நல்லவர்களின் புகழைக் குறைக்க, நாலு கெட்டவர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்!